தவம் இருக்கும் தனி வீடு

தவம் இருக்கும் தனி வீடு

அடுக்கி வைத்த பெட்டிகள் போலே
அனைத்து திசையிலும் முளைத் தெழுந்த
அடுக்கு மாடிக் கட்டுகட் கிடையே
காலஇடமுரண் பாட்டின் காட்டி யாய்
தனி வீடொன்று தவமிருக் கிறது


தோழிய ரெல்லாம் திருமணம் முடித்து
குழந்தைகள் பெற்று வாழும் பொழுதும்,
தனக்கொரு வரனும் அமையா ததனால்
தனித் திருக்குமோர் கன்னியைப் போல
தனி வீடொன்று தவமிருக் கிறது


தேவேந்திரனின் கண்ணடி பட்டு
கௌதம முனிவனின் சொல்லடி பட்டு
ராமன் காலடி என்று படுமென
யுகம் பலகாத்த அகலிகை போல
தனி வீடொன்று தவமிருக் கிறது

முகப்பொலி விழந்த மங்கையைப் போல
முகப்புகள் சிதைந்து சுவர்சிறி திடிந்து
வட்ட மிடுகின்ற கழுகுகட் கிடையே
பட்ட அடியுடன் கிடக்கும் பறவைபோல்
தனி வீடொன்று தவமிருக் கிறது

துரு மிகப் பிடித்து உடைந்த கதவில்
ஒருமூ லையிலே தொங்கும் பெட்டி
பொட்டை இழந்த நெற்றியைப் போல
வெற்றாய்க் கிடைக்கும் வாகனக் கொட்டில்
வெடிக்கும் சுவர்களில் முளைவிடும் வேர்கள்
செடிகள் மண்டி சிதைந்த தோட்டம்
அன்றொரு காலம் செல்வச் செழிப்புடன்
நன்றாய் வாழ்ந்த ஞாபகத்துடன்
தனி வீடொன்று தவமிருக் கிறது

இதனுள் யாரும் இருக்கின் றாரோ?
தனியொரு ஆளோ? ஆணோ, பெண்ணோ?
உதவிகள் வேண்டிய வயதா னவரோ?
உடல்நலம் குன்றிய வாலிபத் தாரோ?
நிதமிவ் வழியைக் கடந்து நானும்
நடக்கும் போதும் யாரையும் காணேன்!
கதவின் பின்னால் மறைந்துள்ள கதையை
இதயத் துள்ளே பூட்டிக் கொண்டு
தனி வீடொன்று தவமிருக் கிறது

எழுதியவர் : ரமேஷ் (கணித்தோட்டம்) (25-Jun-16, 5:31 pm)
பார்வை : 116

மேலே