இராமனைக் காதலி

போரெனின் அரியெனச் சீறி வெல்லும்
பேராண்மைத் தசரதன் குலத்து மாணிக்கம்,
கம்பன்தன் தமிழ் வரிகட்கும் எட்டாத
ஒப்பற்ற அழகன், அவன்தன் விரிமார்
விரித்துப் பருத்த தோளில் கோதண்டம்
தரித்துப் புவனம் வலம்வருவது காணின்
உருகித் தன்னிலை மறக்காதோருளரோ !
அரக்கர் குலச்செம்மல் சிரம் பத்துடையோன்
அருமைத் தமக்கை பாவி சூர்ப்பணகை
இராமனைக் கண்ட கணத்தில் மோகித்து
கரியுரு தவிர்த்து மாயவுரு எடுத்தது
பிழையென மொழிவீரோ ? இவ்வுலகு யாக்கை
இழந்தபின் மாலன் மடிசேர் நல்வினைசெய்
ஆழ்வாரும் அவியுணவு உண்ணும் தேவரும்
ஆழ்கடல் குதித்துப் பார்மகள் காத்தப்
பிழையிலாப் பரந்தாமன் திருமேனி கண்டு
தொழுதொழுகி நிற்பாரே ! நிகரில்லா மானுடன்
இராமன் உருக்கண்டு உருகிய
இராவணன் சோதரி பழிப்பதும் சரியோ ?

ஒருத்தி மணாளனாய்க் கடவேனென
விரதம் பூண்ட உத்தமனை, வில்லொடித்த
பராக்கிரமனை மணமுடித்தனள் சீதை,
வடிவில் சிறந்தவள், கருணை நிறைந்தவள்
வீரத்தில் கொண்டவனுக்கு நிகரவள் ,
வைராக்கியத்தில் வைரமவள், எனினும்
மாரீசனின் சதி தெளியா வெகுளியவள்.
இந்திரன் நடுங்கும் இராவணனை வெறும்
நாணலில் நாணச் செய்த பத்தினி ,
அவள் மணந்ததாலன்றோ அழகருள்
அழகனாம் இராமனை சூர்பணகையோ
இன்னபிற பெண்டிரோ ஆசையாய்த் தழுவி
இன்புற இயலாது தவித்தனர், எவர்க்கும்
என்றும் அவன் காதலிக்கும்
அன்னைச் சீதைமேல் இல்லையோ வெகுளியும் !

ஐயகோ ! ஐயகோ ! என்செய்தேன் யான்
உய்வுண்டோ இந்தப் பாவிக்கும்,
உத்தமி சீதையை , அந்தப் பரந்தாமன்
பத்தினியைப் பழிக்கவும் துணிந்தனனோ ?
அமுதூறும் பாற்கடலில் அயர்ந்துறங்கும்
நிமலன் மாலன் நெஞ்சில் நிறைந்தோளே ,
மாதவன் போற்றும் தூயநின் பேரின்பக்
காதலும், பிழைத்த அரக்கியின் மோகமும்
ஒன்றென்றெண்ணி கவிதையும் காவியவும்,
என்போல் அறிவிலிகள் நிரம்பக் குவிப்பர் !
ஒருக்கால், கண்ணனை ஒறுத்த சிசுபாலனும்
பரமபதம் எய்திய பழங்கதை கேட்டதில்
பிறந்த திமிரோ நானறியேன் , அண்டம்
நிறைந்த அச்சுதனை நின்போல் நெஞ்சம்
உருகியுருகிக் காதலிக்கும் சூத்திரத்தை,
மறையுரைக்கும் மந்திரத்தை , நின்னடியார்
அறிந்த சத்தியத்தை, மெள்ள
மறுமுறை என் செவியுணர இசைப்பாயோ !

எழுதியவர் : (26-Jun-16, 1:02 pm)
சேர்த்தது : harikharan
பார்வை : 128

மேலே