மாமா

சில வருடங்களாகவே மாமாவை முன்புபோல் சரியாக போய் பார்க்கவில்லை;
குடைந்தெடுத்த குற்றவுணர்ச்சி என்னை மேலும் அவரிடமிருந்து அந்நிய படுத்தி பேச முடியா பெரும் பாவியானேன்;

சாக்கு போக்கு சொல்லி சமாளிக்கவில்லை;
நான் நினைத்திருந்தால் நிச்சயம் பார்த்திருக்கலாம், அப்படித்தானே இத்தனை வருடங்களாய் பல சந்திப்புகள் சாத்தியமாயின??

அம்மா அலறியபடி சொன்னால், உங்க மாமாக்கு டயாலிசிஸ் ஆம், ஆஸ்பத்திரியில் இருக்காராம் ஓரெட்டு பாத்துட்டு வருவோமா என்றால்; மறுப்பேதும் சொல்லவில்லை, அடுத்த அறை மணி நேரத்தில் அவர் முன் இருவரும் நின்றோம்;

தூரத்தில் அத்தையை பார்த்தேன் ஆச்சரியத்துடன்,ஆறேழு வருடங்களாய் இருவருக்கும் சரிவர பேச்சில்லை; பக்கத்தில் மரவட்டை போல யாரோ ஒருவர் சுருண்டிருந்தார், இயற்கையிடம் வேண்டிக்கொண்டேன் அது மாமாவாக இருக்கக்கூடாதென; விரைந்து நடந்தேன் இயற்கை என்னை ஏமாற்றிவிட்டதை தாமதமாய் உணர்ந்தேன்;

சவரகத்தி படாத முகத்தில் சகட்டு மேனிக்கு எங்கெங்கும் மயிர்கள்; அப்போது அவரின் அடையாளமான முறுக்கு மீசையை தாடி தின்று செரித்து நன்கு வளர்ந்திருந்தது; அவருக்கு சரியாக கை வரவில்லையென அத்தை புலம்பிற்று;

அவரை எப்போதும் இது போல நான் பார்த்ததில்லை, யாருமே கூட!!

நன்கு திருத்திய மீசை; தோலவிழா பச்சை அல்லது சிகப்பு சால்வைகள்; BSLR சைக்கிள் BATA செருப்பு, ஒரு கைக்ககண்ணாடி சிகை திருத்த சிறு சீப்பு; அந்த BSLR -இல் ஏரி அவர் எங்கும் வியாபித்திருப்பார்; தமாஷாக குழந்தைகளை எப்போதும் பயம் காட்ட செய்வார், கண்களை உருட்டி அல்லது மீசையை முறுக்கி; ரசிக்கவே செய்தன அநேகரின் குழந்தைகள்;

தனது மீசைமேல் கை வைக்க யாரா இருந்தாலும் தடாதான்; வயதை மறந்து நானும் ஓரிருமுறை விளையாட்டாய் நீவிவிட்டதுண்டு; விளையாட்டாய் எப்போதாவது சொல்வார், இந்த தென் ஆற்காடு மாவட்டத்துலயே தாடிக்கு சம்மர் கட் பண்ணவன் உன் மாமனென்று;

கை கால் வலி என்றால் முடக்கத்தான் கீரை என்பார்; காய்ச்சல் ஜுரத்துக்கு கருந்துளசி எங்கிருந்தாலும் கண்டுபுடித்து விடுவார்.
எல்லாமே அவருக்கு கேள்வி ஞானம் தான்; டொனால்டு ட்ரம்ப் சரியான ரெய்ஸிஸ்ட் ஆமே என்பார்; வெளியில் இருந்தால் இந்நேரம் அவருக்கு Britain brexit கூட தெரிந்திருக்க கூடும்;

அவருக்கா இப்படி???

இப்போதைய வேண்டுதலெல்லாம் இருக்கும் நோயை எப்படியாவது ஏமாற்றிவிட்டு சீக்கரம் வரவேண்டும் என்பதே!!

நீண்ட நாட்களாய் தோல் பார்க்காத சால்வைகளுக்காவது; எந்நேரம் பயப்பட காத்திருக்கும் குழந்தைகளுக்காவது; மிதி படாமல் இருக்கும் BSLR காவது; Summer செய்யாமல் இருக்கும் அந்த சவர கத்திக்காவது; நீ வர வேண்டும் மாமா வர வேண்டும்..........

எழுதியவர் : தமிழ்தாகம் (26-Jun-16, 9:33 am)
Tanglish : maamaa
பார்வை : 608

மேலே