மூன்று முடிச்சு
+++++++++++++
முடிச்சி மாறியோடு கல்யாணம்
முடிச்ச ஒருத்திய
முடிச்சிப் போட்டுப்பார்க்கும் சமூகம்
முடிச்சி மாறிகூட கிடைக்காமல் வாழ்வை
முடித்துக் கொள்கின்ற
முதிர்கன்னிகளுக்கு கழுத்தில் மூன்று
முடிச்சு விழ வழி சொல்வதில்லை .
வேண்டாத ஒருத்தனோடு
வேண்டாத ஒருத்திய தங்களுக்கு
வேண்டும் என்பதற்காக
முடிந்து வைக்கும் சங்கற்பம் கொள்ளும்
சமுதாயம்
வேண்டும் ஒருத்தனுக்கு
வேண்டிய ஒருத்தியை
முடித்துவைக்கும் முடிவை
முடிவாக்குவதில்லை.
முடிச்சுகளுக்குப் பின்னால்
அவிழுந்துகிடக்கின்ற
ஏற்றத் தாழ்வுகளை
முடிந்து வைத்து விடுகின்ற
முடிவை எடுக்கா சமூகத்தில்
பெண்ணின் கழுத்தில்
இடப்படுகின்ற மூன்று
முடிச்சுகளில் முடிந்துபோகின்றன
முதல் காதல்கள் .
தூய காதல் பேயை வாழ்க்கைத்
துணையோடு வரவிடாமல் தடுக்க
மணவாட்டியாக வருபவளுக்கு
மந்திரித்துக் கட்டுகின்ற
மணக்கயிற்றின் முடிச்சு
பல பெண்களின் ஆசா பாசங்களை
மரணிக்க வைத்துவிடுகின்ற
உண்மைகளை வெளியே சொல்வதில்லை.
பணத்தை பணத்தோடு இணைக்கும்
பத்திர முடிச்சாக இல்லாமல்
குணத்தைக் குணத்தோடு இணைக்கும்
குங்கும முடிச்சுகள் கொள்கின்ற
கழுத்துகளில் மட்டுமே
அர்த்தமுள்ள வாழ்க்கையின் பேரானந்தம்
உறுதிகொள்கின்றது
கட்டியதால் கட்டியவன்
கட்டுப்படுகின்ற கட்டுப்பாட்டையும்
கட்டிக்கொண்டதால் கட்டியவனுக்காக
கட்டுப்பட்டு வாழ்வதாக கட்டியவளும்
கட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டு
கட்டிக்காக்கும் மூன்று முடிச்சு
கட்டுக்கோப்பாய் வாழ்பவர்களுக்கு கலசம்
கட்டுபாடற்றவர்களுக்கு வெறும் கவசம்.
*மெய்யன் நடராஜ்