அழகிய தமிழ் மகள் --போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான்

வான் பறக்கும்
பறவைகள் போல்
இரு கண்களும்
பூக்களின் பட்டாம்பூச்சிகள்
இருளை யாசிக்கும்
நிலவை போல்
குழியின் கன்னத்தில்
கவிபாடும் மச்சங்கள்
இசையை உள்வாங்கும்
புல்லாங்குழல்கள் போல்
ரோஜாக்கள் தோட்டத்தை
களவாடிய இதழ்கள்
ஓயாமல் அசைந்திடும்
கடலலை போல்
தூக்கத்தை தொலைக்கும்
பருவத்தின் பின்னழகு
பம்பரங்கள் சுழல்கின்ற
மைதானம் போல்
தாவணி முத்தமிடும்
வாழைத் தண்டின் மெல்லிடை
கருவை சுமக்கும்
ஒத்திகை போல்
குடத்தை ஏந்திச் செல்லும்
குளத்தின் தரிசனம்
பனித்துளிகளையும்
பூக்களின் மகரந்தத்தையும்
கலவையாக்கியது போல்
அவள் முகப் பருக்கள் ரசிக்கிறேன்.
டாவின்சி ஓவியமும்
ஷேக்ஸ்பியர் காவியமும்
இணைந்தது போல்
சங்கினால் தீட்டிய முத்துப்பற்கள்
ஷாஜஹான் நரம்பையும்
மும்தாஜீன் என்பையும்
உருக்கிச் செய்தால் போல்
பாவையவள் கால் கொலுசு
மேலைத்தேய நயாகராவையும்
கீழைத்தேய காவிரியையும்
இடை மறைப்பது போல் கருமைக்
கூந்தலில் ஆயிரம் கிளை நதி
சிறகிருந்தும் சிறைப்பட்ட
பறவையின் நிலையை போல்
வார்த்தையில்லா மெளனங்களும்
ஆயுதமில்லா போர்க்களம்.
கரும்பின் சாற்றையும்
அமுதத்தையும் கலந்த குவளை போல்
அவள் நிர்வாணம் தொட்ட
தண்ணீரில் நான் குளிக்கிறேன்.
இருளின் அறையில்
ஒளிரும் தீபம் போல் என்னவளும்
மஞ்சள் முகத்தில் ஒளிரும்
சிகப்பு நிலவாய் அழகிய தமிழ் மகள்