அவனியில் அல்லல்பட வாய்ப்பில்லை

​வெட்டவெளிகளில் அரங்கேறும்
வெட்டிவீழ்த்தப்படும் நிகழ்வுகள்
தட்டிக்கேட்காத மனப்பாங்கால்
கட்டவிழ்த்த வன்முறைகளால்
கட்டிக்காத்த நம்கலாச்சாரமும்
கட்டுப்பாடான நம்சமுதாயமும்
வெட்டுப்பட்ட காயங்களுடன்
மூட்டியத்தீயில் மூழ்கிட்ட
முழுஉடலாய் தவிக்கிறது !

சுரண்டி பிழைக்கும் மனிதர்களை
சுட்டிக் காட்டிடும் இதயங்களை
வெட்டி சாய்ப்பதும் தொழிலானது !

சீனப் பெருஞ்சுவராய் நீளுகிறது
சீரழியும் சமூகத்தில் சீர்கேடுகள் !
நயாகரா நீர்வீழ்ச்சியாய் கொட்டுது
நயவஞ்சக செயல்கள் நாளுமிங்கு !
தலைமுறைகள் மட்டும் பெருகாது
தலைகள் சாய்வதும் கூடுகிறது !

முடிவில்லா பயணமாய் மாறுது
விடிவில்லா இரவாய் தெரிகிறது !
வானிலை அறிக்கையாகுது இங்கு
கொலைகள் குற்றங்கள் நாளுமிங்கு !

சமுதாய சந்தையில் விலைபோகுது
சமத்துவ சமதர்மக் கொள்கைகள் !
சாதிக்காரர் வலையில் சிக்கிவிடுது
சாதிசமயமெனும் வெறிக் கூட்டம் !
அவிழ்க்கப்படா முடிச்சுகள் கூடுது
அவிழ்த்து விடும் வன்முறையால் !

பின்னணி என்பதை ஆய்ந்திடாமல்
முன்னணிக்கு முந்திட வழிகண்டால்
அணிகளாய் பிரிந்திட வழியில்லை
அவனியில் அல்லல்பட வாய்ப்பில்லை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Jul-16, 11:22 am)
பார்வை : 158

மேலே