இரட்டை வேடம்

இரட்டை வேடம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

இரட்டைவேடம் போடுவதில் தேர்ந்தோ ராக
இருக்கின்றோம் நாணமின்றி நாமெல் லோரும்
விரல்நீட்டி அடுத்தவரைக் குற்றம் சொல்லி
வீட்டிற்குள் செய்கின்றோம் அதையே நாமும்
உரத்தகுரல் எழுப்புகின்றோம் நம்இல் முன்னே
உமிழ்கின்ற வெற்றிலையின் எச்சில் கண்டே
கரம்கட்டி நின்றுள்ளம் மகிழு கின்றோம்
கண்முன்னே எதிர்சுவரில் துப்பும் போது !

பொய்சொல்லக் கூடா தென்று
குழைந்தன்பாய் அறிவுரைகள் கூறும் நாமோ
பழகியவர் பார்க்கவீடு வந்தால் உள்ளே
பதுங்கிஇல்லை எனக்கூறக் கற்பிக் கின்றோம்
அழக்கண்டும் கிஞ்சித்தும் இரக்க மின்றி
அடுத்தவர்க்குத் தெரியாமல் சேர்த்து விட்டு
முழங்குகின்றோம் அடுத்தவீட்டார் பெற்றோர் தம்மை
முதியோரின் இல்லத்தில் சேர்க்கும் போது!

பக்கத்தில் துடிப்போரின் துன்பம் தன்னைப்
பரிவுடனே போக்கஎண்ணா நாமோ நம்மின்
துக்கத்தில் பங்குபெற வாரா தோரைத்
தூற்றிவசை பாடுகின்றோம் கோபத் தோடு
தக்கபணம் பெற்றபின்பே வாக்கு தன்னைத்
தகுதியில்லான் என்றறிந்தும் அளித்த நாமோ
எக்காள மிட்டுநாட்டை சுரண்டும் போதோ
எதிர்க்கயாரும் இல்லையென்றே புலம்பு கின்றோம்!


உற்றநம்மின் பொறுப்புதனை உணர்ந்தி டாமல்
உரியநம்மின் கடமையினைப் புரிந்தி டாமல்
மற்றவர்கள் செய்யவில்லை என்றே நம்மின்
மனமறிந்தே பழிதன்னைச் சுமத்து கின்றோம்
வெற்றுச்சொல் பேசுவதை வெறுங்கை கொண்டு
வெற்றிடத்தை அளப்பதினை நாம்வி டுத்தே
முற்றிபலன் கொடுக்கவொரு விதைவி தைக்க
முன்வந்தால் முரண்களெல்லாம் மாய்ந்தி டாதோ

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (3-Jul-16, 7:56 pm)
பார்வை : 158

மேலே