இதயக் கதவை உடைக்க வேண்டுமோ -சந்தோஷ்

இதயக் கதவை உடைக்க வேண்டுமோ ?
--------------------------------------------------------------

சன் டிவியில்
குருவி படம்
அடிக்கடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
நீங்கள் சகிப்புத்தன்மையின்றி
அடிக்கடி
கொந்தளிக்கிறீர்கள்.

விஜய் டிவியில்
மைனா, துப்பாக்கி, நண்பன் படங்கள்
அடிக்கடி ஒளிபரப்பு செய்கிறார்கள்
நீங்கள் சகிப்புத்தன்மையின்றி
அடிக்கடி
கொந்தளிக்கிறீர்கள்.

பொதிகை டிவி
இன்னும் மாறவே இல்லையென
முகஞ்சுளித்து
அடிக்கடி
கொந்தளிப்பு செய்வீர்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில்
வீராத் கோலி
சிக்ஸர் அடிக்கும் போதே
விளம்பரம் போடுகிறான் என
அடிக்கடி
ஆவேசம் அடைந்தீர்கள்.

தந்தி டிவி
ரங்கராஜ் பாண்டேக்கு
நடுநிலைத்தன்மையில்லையென
அடிக்கடி
கோபமடைவீர்கள்.

ஆனால்.. ஆனால்
உங்களைச் சுற்றியும்
உங்களுக்கு அருகிலும்
யாரோ ஒரு சுவாதி
அடிக்கடி
வெட்டப்படுகிறாள்.
யாரோ ஒரு வினுபிரியா
அடிக்கடி
அசிங்கப்படுத்தபடுகிறாள்.

யாரோ ஒரு சங்கர்
அடிக்கடி
ஆணவ கொலைப்படுகிறான்.

யாரோ ஒரு இளவரசன்
அடிக்கடி
தலை துண்டிக்கப்படுகிறான்.

யாரோ சிறுமி
அட
யாரோ ஒரு கிழவியும் கூட
அடிக்கடி அடிக்கடி
வன்கொடுமை செய்யப்படுகிறாள்.

இவைகளை மட்டும்
சகிப்புத்தன்மையோடு
எப்படி பொறுத்துக் கொள்கிறீர்கள்.
ஏன் ஏன் ஏன்
சக பொது மக்களே...?

”உங்க மனசாட்சியில்
கருணையிருக்கா? “
ஊடக விளம்பரத்தினூடே...
உங்கள் இதய கதவை
உடைத்து வந்து கேட்கவேண்டுமோ..?

**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Jul-16, 12:06 am)
பார்வை : 47

மேலே