வனமீன்களும் மலைக்கனிகளும்

சுசீந்திரன் என்னும்
சுத்தக் கவிஞன்
கவிதை ஒன்றை
ஓவியம் என்றான்
அந்த
'ஓவியத்தின் விலை
இரண்டு கண்கள் '
'தோல்வியின் கலை
பயின்றவனே
வெற்றியின் மேடை
ஏறுகிறான்'
என் மேடையில்
என்றும் கொஞ்சும்
சலங்கை ஆகினான்
சுஜய் ரகு
காட்டாறுகளில் நீந்தும்
வனமீன்களைப் போல்
பறிக்க ஆளின்றி
தானாயுதிரும்
மலைக் கனிகளைப்போல்
கவிதைகளில் நீந்தி
உருகுமொரு ஜீவன்
தென்காசி பாலா .
நிலவு சிவந்துவிடும்
பொழுதுகளில் மட்டும்
வெண் புரவியோடு
நிலவின் மேடுகளேறி
ஒளிந்து கொள்ளும்
நிலவின் ராணி
கிருத்திகா தாஸ்
'விழிகளில்
வீணை மீட்டும்
மென்னுறக்க கீதத்தில்
அவனுள்
நான் மறக்கும்
நெற்றி முத்தமவன்...'
என்று அடிமனம்
தோய்க்கும் 'புலமி'
'நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை'
எழுதும் கார்த்திகா
நிலாக்கண்ணனை மட்டும்
பார்த்தவுடன்
பூமியை கீழே போட்டுவிட்டு
வானத்தில் பறந்துவிடும்
'பறவை '
என்னைத் துவைத்தென்
முதுமையைக் கரைத்து
இளமை வானவில்லாய்
உலர்த்திய இனும் சிலர் ..
அட ..
கவிதை எழுதுவதைவிட
கவிஞர்களை எழுதினாலே
அது அற்புத
கவிதையாகிவிடுகிறதே
---இந்தக்
---கவிதையைப் போல !
*
கவித்தாசபாபதி