சித்திரவதை மனதில் கொப்பளிக்கும் கோபம்

ரத்தக் களறியான
அவனது காயத்தின் மீது
மீண்டும் மீண்டும் எட்டி உதை
தானாக அது ஆறிவிடும் – விடாதே
அவனது வலி – அது கிடக்கட்டும்
அவன் காயத்திலிருந்து
ரத்தம் பெருக வேண்டும்
சித்திரவதையின் நினைவு
அவன் அடிவயிற்றில்
தேங்கிக் கிடக்க வேண்டும்.

மீறிப் பறப்பேன் என பிதற்றுகிறானா.
நீ ஓர் குற்றவாளி என்று சொல்
அதை அவன் மறக்கக் கூடாது.
சேற்றை வாறி அவன் மூஞ்சியில் வீசு
அவனது சொல்லில் காட்டு மலர்கள்
பூத்து மனக்கிறதா,
மிதி – ரத்தக் கூழாகட்டும் அவன் கைகள்
பிணத்தின் கைகளைப் போல
வெளுத்துப் போகட்டும்

கிடக்கட்டும்
குப்பை போல
அவன் கீழே கிடக்கட்டும்
கவனமாயிரு
உள்ளே பூட்டிய இசையை
அவன் இதயம் ஒருக்காலும்
விடுதலை செய்யவே கூடாது

உன் சட்டம் வேறு
என் சட்டம் வேறு
ஒரு நதி சீறி எழுந்து
நிலவோடு பேகமானால்
மலைகளால் – நீரிலேயே
சுவர் எழுப்பு.

ஒரு நட்சத்திரம்
தூரம் தவறிக் கீழே பாய்ந்து
அந்தச் சிறுவனின்
இளம் உதடுகளில் பளிச்சிடுமானால்
அதை நெறித்துச் சபித்து
எங்கோ ஒரு வானமூலையில்
விட்டெறி

ஒரு காட்டுமான்
சுதந்திரத்தையும்
காட்டுப்பச்சையையும்
ஒன்றுசேர அருந்துவதைப்
பார்க்கிறாயா,
நாயை அடிப்பது போல அடி

ஒரு மீன்
துளி நீருமில்லாமல்
வாழ்ந்துவிடும் எனில்
கரை, நிலத்திலிருந்து
மீனை விலக்கி வை.

கைகள் – அவனது கைகள்
காற்றை அணைத்து மகிழும்
கனவை ரசிக்குமானால்
அவற்றைக்
கறிவெட்டும் கட்டைமீது
கிடத்திக் கொத்து

ஒரு விடியல் – பளிச்சிடும்
கிளர்ச்சியோடு புலருமானால்
இருளின் கருப்பு நிற வானை
அதன் கண்களில் பாய்ச்சு.

அதோ? அவனைப் போல
ஒரு மனிதன் – அவனுக்கு
காற்றைப் போல ஒர் இதயம்
இருக்கக் கூடுமானால்
அவனது முழங்கால்களை
மார்போடு சேர்
பாறைகளைச் சேர்த்து
இறுகக்கட்டு
உலகின்
அடி ஆழத்துக்கு
அவனை அனுப்பி வை!

– மார்கோஸ் ஆனா
__________________________________________________________________
மார்கோஸ் ஆனா: பிறப்பு 1921 ஸ்பானியக் கவிஞர். ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் சோசலிச இளைஞர் கழகத்தில் இணைந்தார். அப்போரில் அவரது தந்தை கொல்லப்பட்டார். போரின் இறுதியில் அவர் (18-ஆவது வயதில்) கைது செய்யப்பட்டார். முதலில் துக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின் முப்பதாண்டு தீவிரச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. பின்னாளில், அவர் தனது 40-ஆவது வயதில் (1961 – இல்) 22 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைத் தாகமும் போராட்டத் துடிப்பும் ஒன்று சேரக் கேட்கும் பல கவிதைகளை எழுதியவர்.

ஆங்கிலம் வழியாகத் தமிழில்: புதுர் இராசவேல்.

எழுதியவர் : மார்கோஸ் ஆனா (4-Jul-16, 11:22 pm)
பார்வை : 143

மேலே