ஆ வலிக்குது வே

( லாரியில் கொண்டு செல்லப்படும் ஒரு மாட்டின் மொழியில் பிறந்த கவிதை. அண்மையில் இணையத்தில் மாடுகளின் அவலம் பற்றி வந்த ஒரு புகைப்படத்தின் தாக்கத்தில் எழுதிய வரிகள் )

ஆ !! வலிக்குது வே !

கொஞ்சம் பைய போங்களேன்.

மந்த மந்தயா லாரிலே கட்டி
சந்த சந்தையா கூட்டிட்டு போறேளே,
நோவுது வே !
பசிக்குது வே !

புல்லும் புண்ணாக்கும் நல்லா இருக்குமே,
நெல்லு அடிச்ச வைக்கோலும்
நல்லா இருக்கும் வே ,
தின்னு பாக்க கூடாதா ? பாவம்
எங்கள கொன்னு தான் திங்கணுமா ?

தப்பென்ன செஞ்சேன்னு சொல்லுங்க எசமான்,
பருத்தி கொட்ட வேணும்னு உன்னைய
வருத்தி எடுக்க மாட்டேன் ,
கொசு கடிச்சாலும் குளிரு அடிச்சாலும்
சத்தம் இனி போட மாட்டேன்.
தயவு செஞ்சு என்னைய
தொழுத்துக்கே கூட்டிட்டு போங்களேன் !!!

உங்கய்யா கூட வரையிலே ,
தண்ணி காட்ட ஓடி வருவீய !
கட்டி விளயாடுவீய ,
மறந்துடீயளா ?? ஏன் சாமி
இந்த கொலகார பயலுவள்ட
பிடிச்சு கொடுத்தீய ?
வீட்டுக்கு போவலாம் ! வந்து
கூட்டிட்டு போங்களேன் !!

எவன் கத்தி எப்போ
என் கழுத்துலே விழுமென்னு தெரியலியே,
வெட்டும் போது வலிக்குமே
வலிக்காம வேட்டுவீயளா ??
பயம்மா இருக்கு வே !!
கண்டிப்பா திங்கணுமா எங்கள ?

வண்டிலே ஏத்தி ரெண்டு நாளாச்சு
வக்கோலும் காடி தண்ணியும்
காட்டாட்டியும் பரவாயில்லே
நிக்க கூட எடமில்லாம
நூறு பேத்த திணிச்சிட்டு போறீயளே !
வண்டி குலுங்கயிலெ
வயிறு வலிக்குது வே
கொஞ்சம் பைய ஓட்டுங்களேன் !!

ஐயோ ! ஐயோ !
என்ன வே அது ?
ஆ !! காந்துது வே !!
பச்ச மொளகாய கண்ணுலே வைக்கீளே !!
எரியுது வே !!
பாவமா இல்லியா ?
நீரு சொல்லறதெல்லாம் கேக்கேன் வே
பச்ச மொளகா மட்டும் வேண்டாம்
வலிக்குது வே
கண்ணீரெல்லாம் கரஞ்சாச்சு
எங்க இறச்சி திங்க
இம்புட்டு பாடு படுத்தணுமா?
யோசிச்சு பாருங்க வே !!

எப்ப வெட்ட போறீய ?
நாளைக்கா? இல்ல மத்த நாளா ?
பொறவு ஏன் வே இப்பொவே கொல்லுதீய ?
கொளம்பு கட்டி கழுத்த வெட்டுற வர
எங்கள மாடா கூட மதிக்க மாட்டீயளா ?
மனுஷனுக நீங்க
இவ்வளவு மோசமா வே ?

ஆ !! பைய போங்களேன் ,
ரொம்ப நோவுது வே !!!

எழுதியவர் : Hariharan (7-Jul-16, 11:23 pm)
சேர்த்தது : harikharan
பார்வை : 126

மேலே