தண்டிக்காமல் விடுவனோ
ஊருணியின் கடைசி நீரும்
வரண்டு கிடக்கும் கோடைக் காலம்
தலைவிரி கோலமாய்
தெருவோரம் ஒரு ஆலமரம்--அருகில்
தகவு தரும் ஊர்க்கோயில்
அரசாங்க பணிபுரியும்
அந்த ஊர் மேல்சாதி பையனை
அம்புட்டு சனமும் பாராட்டி
பொண்ணு கொடுக்க
போட்டி போட்ட நிலையில்
கீழ்சாதிப் பொண்ணை
காதலிச்ச அந்த பையனின் விஷயம்
எல்லோருக்கும் தெரிந்துவிட
ஏற்க மறுத்த பெற்றோர்
மாமன் பொண்ணை நிச்சயம் பண்ண
ஒருநாள், காதலியோடு
ஊரவிட்டு ஓடிப்போயி
உற்றார், உறவினர் யாருமின்றி
வேற்று ஊர் கோயிலில்
விவாகம் புரிந்து கொண்டனர்
சாமி குத்தம், ஊர் தாங்காது
சாதி,சனம் செத்துபோகும்—அதனால
முறைப்படி கல்யாணம் நடத்த
முடிவெடுத்ததாய் சொல்லி
பொண்ணையும், பையனையும்
சொந்த ஊர் அழைத்து வந்தார்கள்
அடுத்த சாதி இரத்தம்
அண்டக்கூடாது நம்ம வாரிசு உடம்புல
என்று முக்கியஸ்தர்கள்
ஒன்றுகூடி இரவோடு இரவாக
ஒரு முடிவெடுத்தார்கள்
அடுத்தநாள் விடிகாலை
ஆலமரம் தலைவிரித்து நிற்க
இரு உயிர்கள் பரிதாபமாய்
எரிந்து சாம்பலாகிக் கிடப்பதை
ஏற்கமுடியாமல் ஊரே அழுதது
ஊர்வழக்கம் பிடிக்காம சிறுசுகள்
உயிரை விட்டதாய்
ஊரில் சிலர் சொன்னாலும்
குடும்பத்தாரும், முக்கியஸ்தர்களும்
கொன்றதாக பேசிக்கொண்டார்கள்
குற்றங்கள் புரிவோரை
ஏற்றுக்கொள்கிறதோ சமுதாயம்!
தெய்வத்துக்கு தெரியாதா என்ன?
தருமநீதி தடம்புரளச் செய்தோரை
தண்டிக்காமல் விடுவானோ?