வாடா மல்லி
வந்தவர்
எங்கள் குடும்பமே
குருட்டு தனமான
கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்கள் தான்
என ஆரம்பித்து
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை
அறிவியல் பேசிவிட்டு
ஒரு தட்டு குலோப்ஜாமூனை
விழுங்கிவிட்டு
பெருமையை பேசி
அப்படியே அவளையும்
யாரை
காலை முதல் அரும்பாடு பட்டு
தன் சுருக்கங்களை அந்த
வெண்ணிற பூச்சுக்குள்
மறைத்து விட்டு
கண்ணாடியை விட்டு அகலாது
அழகாய் அதே சமயம்
அழகாய் காட்டும்படி ஒரு
புடவையை கட்டிக் கொண்டு
வாடியது தெரியாதபடி
வாடா மல்லி வைத்து
தன் முப்பதில் ஒரு ஐந்தை
கழித்து விட
அரும்பாடு பட்டு வந்த
அதே அவளை
வைத்த கண் வாங்காமல்
பார்த்து
நன்கு விழுங்கி செரிமானம்
செய்து விட்டு போனவர்கள்
இறுதியாய் அனுப்பிய செய்தியில்
சிலபல வாடிக்கை விசாரிப்புகளின்
சுற்றி வளைப்புக்கு பிறகு
சொன்னது
எல்லாம் சரிதான்
ஆனால் செவ்வாய் தோஷம் தான்
கொஞ்சம் இடிக்கிறது