யாருக்கும் வெட்கமில்லை

ஒட்டாத உள்ளங்களை உறவென்று சேர்த்துவைக்கும்
=உதவாத செயல்புரியும் நாருக்கும் வெட்கமில்லை
பட்டாசுத் தொழிலுக்கு பாலகரை பயன்படுத்தும்
=பணக்காரர் என்கின்ற பேருக்கும் வெட்கமில்லை
கட்டாயத் திருமணத்தால் கௌரவத்த்தைக் காப்பாற்றும்
=காரியங்கள் செய்கின்ற ஊருக்கும் வெட்கமில்லை
எட்டாதப் பழத்துக்கு ஏங்குகின்ற உழவரெல்லாம்
=எருதுகொண்டு உழும்வயலின் சேறுக்கும் வெட்கமில்லை
.
கல்வியெனும் பெயரினிலே கஷ்டத்தில் பிள்ளைகளை
=காசுகொடுத்துப் போடுகின்ற பெற்றோர்க்கும் வெட்கமில்லை
சொல்லியழும் துன்பமென சூசகமாய் மருத்துவத்தில்
=சூதாட்டம் ஆடும்மருத் துவமனைக்கும் வெட்கமில்லை
செல்விஎன இருப்போரை திருமதியாய் ஆக்குதற்கு
=சீதனத்தை எதிர்பார்க்கும் திருடர்க்கும் வெட்கமில்லை
நல்லிதயம் படைத்திருந்தும் நமக்கென்ன என்றிருக்கும்
=நடைமுறைகள் கொண்டிருக்கும் நாட்டார்க்கும் வெட்கமில்லை


ஊர்ப்பணத்தை உலையிலிட்டு உல்லாசம் கொள்வோரை
=ஊரூராய் கொண்டுசெலும் காருக்கும் வெட்கமில்லை
நேர்மையற்றோர் வாய்ருசிக்க நித்தநித்தம் நெல்கொடுக்க
=நிலத்தினிலே இறங்குகின்ற வேருக்கும் வெட்கமில்லை
பார்த்திருக்க உண்டியலை பகற்கொள்ளை அடிப்போரை
=பார்ப்பதற்காய் கடவுள்வரும் தேருக்கும் வெட்கமில்லை
சேர்த்தபணம் அத்தனையும் செலவுசெய்த பின்னாலும்
=சேகரிக்க நினைக்கின்ற யாருக்கும் வெட்கமில்லை

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Jul-16, 2:37 am)
பார்வை : 227

மேலே