சாகும் வரை கைவிடாது
ஆழ்கடல்போல
அமைதியாய் இருக்கும்,
இயற்கையின் வலிமைபோல
அழிவு வராமல் காக்கும்,
முன்னேற்றத்தின் அச்சாணி
பூலோகமே அதன் காலடியில்
இயற்கை தாவரம்போல்
இதுவும் வளர்ச்சி காணும்,
பெரிய விஷயங்களை எளிமையாக்கும்
செயலில் அதன் அழகு மிளிரும்,
அறிந்தவர் தலை வணங்குவார்
ஆழிபோல் மௌனம் கற்றுதரும்
இளமையில் கூடி வரும்
இடைவிடா முயற்சியால் மேன்மையுறும்,
இதற்கென போடும் முதலீடு
அதிக இலாபம் தந்து உயர்த்தும்
இது இருந்தால் எல்லாமும் தரும்
இல்லையென்றால் என்ன தரும்?
அறியாமையெனும் இருளை
அகற்றி ஒளிதரும் அறிவு தான் அது,
வாழ்க்கைக்கு அறிவு வலிமை தந்து
வளம் சேர்க்கும்
மதியால் உழைப்பவன் ஆளுகிறான்
மெய்யால் உழைப்பவன் ஆளப்படுகிறான்
அறிவை வளர்க்காமல்
அகிலத்தில் உயர்வில்லை,
மனிதனென பெருமைபட
முயலவேண்டும் அறிவு பெற,
செல்வத்தை விட அறிவு மேலானது
சாகும் வரை கைவிடாது