மாறுபட்டக் கோணங்கள்ஷகிலா

மாறுபட்டக் கோணங்கள்.....(ஷகிலா)

பகர் மின்விளக்கை ஒளிரவிட்டு
பலர் முன்னே பஞ்சணையிட்டு
பயிர்ப்பு அச்சம் நாணம் விட்டு
பார்வைக்கு விருந்தாய் காமனைத் தொட்டு
பருவத்தை திரையில் படையல் போட்டு
காண்பவர் கிறங்கிட கவர்ச்சிக் கூட்டி
காளையர் உணர்வுகளை உச்சமாய் உசுப்பிய
கனவுக் கன்னியா இவள்....?

கற்பனையில் மாறாட்டம்
கண்களுக்கோ ஏமாற்றம்.....

வட்டமுக மஞ்சள் நிலா
வனிதைக்குள் மதலை உலா
அரண்ட அலர்ந்த ஆம்பலா
மருண்ட மானின் சாயலா
இதழ் சுரக்கும் சீம்பாலா
இறைவன் படைப்பின் குளிர்சாரலா
இயல்பாய் பழகும் இவளா
கவர்ச்சிக் கன்னி ஷகிலா...?

ஆடை குறைத்தவள் எல்லாம் அவிசாரி அல்ல
அள்ளி இழுத்து மூடியவள் எல்லாம் அர்ச்சனைப்பூவும் அல்ல.....

இயக்குநரிட்ட ஆணைக்கு இணங்கி
இயல்புக்கு மாறாய் செயற்கையாய் பிணங்கி
வரும்படி வர்த்தலுக்காய் வணங்கி
வாஞ்சையில் சுகிர்ப்போர்க்கு சுணங்கி
உழைத்ததை உறவுகளுக்காய் சேதாரமாக்கி
அண்டி பிழைப்பவர்க்கு ஆதாரமாகி
இரட்சணை அற்று இழுதையில் வாழும்
லட்சணப் பூவையின் இலக்கணம் இவளே.....

திரை உச்சத்தில் ஓட்டினாள் அன்று தேரோட்டம்
இரை மிச்ச மீதியாய் இன்று விழியில் நீரோட்டம்!

- கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (18-Jul-16, 2:12 pm)
பார்வை : 56

மேலே