அறிவு எதுவெனத் தெரிகிறதா
அறிவு எதுவெனத் தெரிகிறதா?
என்னை முட்டாளாய்
என்றும் பார்க்கும்
என்னவளின் பார்வைக்கு
இதனை வைத்தேன்
சின்னவளவள் வயதில்
என்றாலும் என்னை
சீண்டுவதில் தனியின்பம்
கொண்டவள் அவளே.
அட அறிவே அற்புதமே
என்று சொல்லும்
மடப் பெண்ணின்
காதிலிதனை ஓதுவேன்.
பருப்பொருள் ஒன்றினை
விரித்தறியும் புலனறிவு
அதன் அகத்தே நின்று
நுண்ணிதா மப்பொருளை
விரித்தறியும் மனவறிவு
இம்மனவறிவே ஓரணுவை
ஒரு நொடியில் மலைபோலே
பெருக்கச் செய்யும்
அம்மலையை மறுநொடியில்
குறுகச் செய்யும்
ஒரு புள்ளியிற் தொடங்கும்
பெரு வட்டம் எல்லாமும்
மறுபுள்ளியிற் சுருங்கும்
சிறுவட்டம் ஆகிவிடும்.
புலனறிவும் மனவறிவும்
தலமறிந்து நின்றால்
சலனமில்லை சகடக்கால்
வாழ்வில் என்றும்
தாழ்வும் இல்லை.
புலன்வழிப் புகும்
உவப்பும் கசப்பும்
நலந்தனை பகுத்திடும்
உணர்வோ என்று
சீர்தூக்கும் அறிவே
செருப்படி படாமல்
நம்மைக் காக்கும்
சிறந்த அறிவாகும்.