பணம் + மனம் = குணம்

மனமே இல்லாத மனிதர்களுண்டோ?
இருக்கிறார்கள், வெறும் சுயநலத்துடன்.
அவர்களுக்கும் பொதுநலம் வந்திடலாம்,
பணம் இருந்தால் ஒரு வேளை.

குணமே இல்லாத மனிதர்களா?
கண்ணில் படுபவர்களில் அநேகர்.
மனத்தூய்மையும் வாய்மையுமின்றி.

அவர்களும் மாற வழியுண்டு,
மனம் சீரானால்.

பணம் இல்லாத மனிதர்கள்..?
இங்கு ஏறக்குறைய எல்லோருமே.

புத்தன் சொன்னான் எல்லோரிடமும்
ஆசைக்கு அணையிடுங்கள்
மனதுக்கு வளையிடுங்கள்
மனிதனாக மாறலாம்- என.!

பணத்திற்கு வசியம் அதிகம்
பணங்கொண்டவனுக்கு வக்கிரம் அதிகம்
பணத்தால் உயர்ந்தவனை நல்வழிப்படுத்த
இங்கு யாருமே முயல்வதில்லை, அவனும் கூடத்தான்..

பாடங்கள் போதனைகள் ரோதனைகள் எத்தனை எத்தனையோ
கற்றுத்தெளிய முயற்சி இருந்தும்
களவு சூது இங்கு காவு வாங்குகிறது.
கள்ளங்கபடமில்லாத மனதுக்குள் களவு சூது விதைத்தது யார்?

அழுக்கு அவலம் இங்கு ஆடையின்றி திரிவது கண் கூடு.
சமூகத்தின் லட்சணம் சரி செய்ய யாருமில்லை.
ஆருடம் நம்பும் மனிதனுக்கு பொறாமை தான் நிறைய,

உதவும் கைகளும் இங்கே உதாசீனப்படலாம்,
உன் பாவம் தொலைக்க உதவுகிறாயா, என

சிக்கல்கள் இங்கே இடியாப்பம் போல
சீர் செய்ய எல்லோரும் முயற்சிப்போம்,
கனவு தான் இது, கற்பனை செய்யுங்கள்.

கடவுளையே தொலைத்தவர்கள் நாமெல்லோரும்
காசையே கடவுளாக்கி விட்டோம்,
பணம் மட்டுமே இங்கு பிரச்சினை என்று
பல பேர் நினைத்து நடைபிணமாய்,

நாடும் காலமும் இங்கே நலிந்து கொண்டு இருக்கிறது,
இல்லையா?

எழுதியவர் : செல்வமணி (20-Jul-16, 10:34 am)
பார்வை : 386

மேலே