இந்த சமயம் அந்த சாலை மௌனமாகிறது

இந்த சமயம் அந்த சாலை மௌனமாகிறது
--------------------------------------------------------

இந்த சமயம் சாலை மௌனமாகிறது
இந்த சமயம் பலத்த
சப்தங்களுக்குப் பின்னால்
ஆழ்ந்த நிச்சலனம் பயணமாகிறது
கோடுகளின் நடுவே
மரணமும் வாழ்க்கையும் என
கைகளிலும் மனதிலும்
சுமைகளோடு கடந்த மூவரின்
இந்த சமயம் சாலை மௌனமாகிறது
இன்னும் ஆம்புலன்சோ
சவஊர்தியோ வரவில்லை
இந்த நாள்
இதைக் காணும்
எங்களுக்குள்
நிலைப்பதிவு ஆவதில்லை
நாங்கள் நாட்கள் மறந்தவர்கள்
எங்களின் கைகடிகாரங்கள்
செயலிழந்து
மணிக் கட்டுகள் குளிர்ந்து
அச்சுவிழுந்ததைக் கூட
பல நாட்களாகியும்
கவனித்திருக்கமாட்டோம்
நாங்கள் நேரம் மறந்தவர்கள்
உற்றவர்கள் யாரும்
வாழ்த்துசொல்ல மறந்துவிட்டதால்
எங்களுக்கு
பிறந்தநாளும் இல்லை
நாங்கள் வயது மறந்தவர்கள்,,,
அந்த மூன்று பேரும்
உயிரோடு இல்லை
என்பது மட்டும் தெரிகிறது
அவன் இன்னும் தன்மனைவியிடம்
பேசியிருக்கமாட்டான்
பாதி சிதைந்த கைப்பேசிஅலறுகிறது
நாளை அது அழக்கூடும்
அவன்இன்னும் சம்பள பணத்தை
தன் பெற்றோருக்கு அனுப்பியிருக்க வாய்ப்பில்லை
அவன் பணமுடிப்பைத் தாண்டி
அவன் சம்பளப்பணம் சிரிக்கின்றன
யாராலேயோ களவாடக்கூடும்
அவன் ஊருக்கு போவதாக இருந்திருப்பான்
தூதஞ்சல் அனுப்பிய ரசீதும்
காலாவதியான அனுமதி அட்டையும்
குருதி பீய்ந்த ழிந்திருக்கின்றன
வேகம் உயிரின் நீட்சியை தீர்மானிக்கின்றது
முன்னும் பின்னும்
ஒரு நொடிக்கான தாமதத்திலும்
முந்துதலிலும் தான்
உயிரோடு இருப்பதும் இல்லாதிருப்பதும் இங்கே
காலாவதியாகும் ஆசைகளை
அற்பம் உறங்கிட நேர்ந்தால்
கனவுகளிலோ
இல்லையானால் நினைத்திருப்பதிலோ
தீர்க்கிறோம்
அறிவு என்னும் நடிகன்
எங்களை வெண்மைப் படுத்துகிறான்
நடிக்கக் கற்றுக்கொள்கிறோம்
மெருகேற்றிக் கொள்கிறோம்
எங்களின் வியர்வை நெடிகளுக்கு
வெட்கம் அதிகம்
குளிர்ப்பதன அறையிலேயே
இருந்துவிடுவோம் ஆதலால்
அவைகளுக்கு வெளியேற்றம் இல்லை
நாங்களும் மெழுகால்
மொழுகப் பட்டவர்கள்தான்
கூலித் தொழில் செய்யும்
யாரோ சிலர்
எங்களுக்கு உறவினர்களாக
இங்கு வந்திருக்கலாம்
நாங்கள் பார்த்திருக்கமாட்டோம்
அவர்களின் வியர்வை நெடிகளால்
அவர்களிடமிருந்து நாங்கள்
அப்புறப் படுத்தப் பட்டிருக்கலாம்
அவர்களும் மெழுகால்
மொழுகப் பட்டவர்கள்தான்
செய்யும் வெலை சிறிதோ பெரிதோ
பெற்றுக்கொள்வது
சிறிய அல்லது பெரிய அளவு
கூலிமட்டுந்தான் ம்ம்
“ஒரு குடைக்குக் கீழே
எங்களுக்கு ராஜா வேஷம்
இவர்களுக்கு தொழிலாளி வேஷம் “
அவ்வளவுதான் ம்ம் ,,
இங்கு ஜாதியில்லாமல்
ஒரு ஜாதி இருக்கிறார்கள்
முதலாளிகள், மேலதிகாரிகள்
மதம் இல்லாத மதம் இருக்கிறது
எந்த வேலையாக இருந்தாலும்
அதற்கான சம்மதமும்
மாதம் சம்பளத்தின் தாமதமும் என
ஜாதியில்லாத ஜாதியும்
மதமில்லாத மதமும் இருக்கிறது
கடலுக்கப்பால் முத்திருப்பதைப்போலத்தான்
இங்கே பலரின்
கடனுக்கப்பாலும் அவர்கள் சிரிப்பிருக்கிறது
சவாரி கிடைக்காத
டேக்சி டிரைவர் ஷாஜியும்
இன்னும் வரவில்லை
சாப்பிட்டிருக்க மாட்டான்
இடையிரவில் வந்துவிட்டு
நாளைய விடியலில்
ஸ்கூல் ஆர்டர் கிடைக்கணுமே என்று
வயிற்றைத் தழுவி
சிறிதும் காண்பிக்காமல்
நகைச்சுவையாக பேசும் ஜோசப்பும்
பைசாக்களை தலைமாட்டில் வைத்துக்கொண்டு
கஷ்டங்களையே பேசித் திரியும்
சந்தோஷும்
எப்போதும் சாப்பிட ஒன்னும் இல்லையா
என்று அலாதியாய்
கேட்க சலிக்காத இல்யாசும்
இதையெல்லாம் பார்த்தும்
கேட்கப் பொறுக்காமல்
விழுந்து விழுந்து உள்ளதை உபசரிக்கும்
நானுமென
எல்லோரும் ஒருவரின் வருகைக்காய்
ஒருவர் என
குபூஸ் பாக்கெட்டை
பிரிக்காமல் தான் வைத்திருக்கிறோம்
இரண்டாயிரம் ரியால் சம்பளம் வாங்கும்
சமீரின் காலாவதி
அவன் குடும்பத்தார் ஹஜ்
போகவேண்டி வாங்கிய கடனுக்கு
வட்டிக் கட்டித் தீரும்வரை
ஒரு தொலைப்பேசி இணைப்போ
வந்த முதல் முதலில்
எந்த ஒரு கடிதமோ
இங்கு யாருடைய வறுமையையும்
தனிமையையும் வாட்டிடத்தான் இல்லை
ஆண்களே இது ஆண்களின்
பசலை உணரும் தருவாய்
புருஷத்தனத்திற்கும்
கேசத்திற்கும் சருமத்திற்கும் என
ஆயுள் உதிர்க்காலம்
நாங்கள் நன்றாக இருக்கிறோம்
நீங்கள் நன்றாக இருங்கள்
என்னும் வாசகம்
ஜாதிமத பேதமின்றி
எல்லோருக்குமான ஒருமித்த
மந்திரம் ஆகிறது
மாத்திரைகள் எங்கள் இளமைகளை
பாதி வாங்கிக் கொண்டிருக்கின்றன
பிரியமானவர்களுடைய
ஏகாந்தத்தை ஏற்றுக் கொள்ளவோ
அடைத்துவைத்த மடையை
திறந்து அழவோ
அவகாசமற்ற பாவிகளானோம்
நரகமும் சொர்கமும் ஆடம்பரங்களுடன்
எங்களோடு சேர்ந்தே
நகர்கிறது
வாழும்போதே இவைகளை
சந்திக்கும் நாளாந்தங்களுக்கு
எங்களை நாங்கள்
தயார் செய்துக் கொண்டோம்
மரண பயத்தை
அவ்வப்போது வெளிரும்
எங்கள் முகங்களை கழுவிக்கொண்டு
சந்திக்க விரைந்துவிட்டோம்
இங்கு வீரர்கள் எனவோ
அந்தஸ்து உள்ளவன் எனவோ
பிதற்ற யாரும் இலர்
பசித்தால் அவனுக்கு அடிவயிறு எரியும்
அடித்தால் அவனுக்கு வலிக்கும்
என்பதையும் தாண்டி
எல்லோருக்கும்
நாம் போய் சேரும் காலத்தில்
நமக்காக அங்கே
யாரோ காத்திருக்கிறார்கள்
எங்கள் உயிரை
நாங்கள் காத்திருக்கவேண்டும்
என்னும் நப்பாசை மட்டுமே சூழும்
மயானக் கலவரப் பகுதி
எல்லாமே இழந்துவிட்டு
எங்களுக்காய் என்ன செய்தாய்
என்று கேட்கும்
சொந்தங்களுக்கென சொல்ல
எங்களிடம் பதிலிருப்பதில்லை
மௌனியாகிறோம்
கண்ணீரையும் உருக்கிவிட்ட
வெயிலுக்குப் பின்னாலும்
சட்டை மறைக்கும்
வயிற்றுப் புண்ணிற்குப் பின்னாலும்
கடந்து வெட்டும்
வார்த்தைகளையும் நேசிக்கிறோம்
அவர்களுக்கு
எங்களைவிட்டால்
வேறு யாரிருக்கிறார்கள் என்று
பசிக்கின்ற வயிறுகளுக்கும் சேர்த்து
எங்களுக்கு நாங்களே
சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்
எங்கள் வாரிசுகள்
எங்களை அப்பா
என்றழைக்கமட்டும்
உயிரை பிடித்து வைத்திருக்கலாம்
எந்த கடவுளிடமாவதும்
மன்றாடி எங்களில் சிலர்
வாசிக்கின்றவர்களுக்குதான்
என்ன வலி ம்ம்ம்
வாழுகின்றவர்களுக்கே வலி ,,
இந்த சமயம் சாலை மௌனமாகிறது
இந்த சமயம் பலத்த
சப்தங்களுக்குப் பின்னால்
ஆழ்ந்த நிச்சலனம் பயணமாகிறது
இன்னும் ஆம்புலன்சோ
சவஊர்தியோ வரவில்லை

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (22-Jul-16, 7:44 am)
பார்வை : 77

மேலே