தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்
41.இலைகள் அசைந்தும் தண்டுகள் நகர்வதில்லை
தனிமையின் சிறைச்சாலையில் நிழல்கள் கைதிகள்
நான்கு கால் நாற்காலியும் மரங்களின் சமாதி
42.கைகளின் ரேகைகள் தேய்வடைந்து போகிறது
பருவம் கடந்த மரணமும் கதவை தட்டி அழைக்கிறது
வெற்றுத் தாள்களின் வாழ்க்கைச் சுவட்டில்
அடிமையான கூண்டுக்கிளிகளின் சாட்சிக் கையெழுத்து
43.ஈரமான துணியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்ளும்
ஏழையின் இரைப்பைக்குள் நுழையும் உமிழும் அமுதாய் இனிக்கிறது.
44.மஞ்சள் படிந்த பழைய நாட்குறிப்புக்களை புரட்டிப் பார்க்கையில்
இறைவனின் பாதையில் யாத்திரை செய்பவனும் விபச்சாரியின்
வருகைக்காய் காத்து நின்ற நாட்கள் உணர்வுகளுடன் போரிடுகிறது.
45.ஆணுறை வாங்கிக் கொண்டு வேசிக்காய் காத்திருப்பவன் தன்
மனையாளின் கருவால் பிறந்த பெண் பிள்ளையை நினைக்கவில்லை
46.அடுக்கு மாளிகையை பார்த்து ஏங்கிக் நிற்கும் ஏழையின் உள்ளம்
கனவின் நிலத்திலும் குடிசையொன்றை கட்டிக் கொள்ள இயலவில்லை
47.ஈரமான உள்ளம் கொண்ட பெண்ணின் தாய்மை
யாருமற்ற சாலையில் கைக்குழந்தையை வீசிவிட்டு
அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள்.தெருநாய் வந்து
இவள் செய்த குற்றத்தை உண்டு ஏப்பமிடுகிறதா என்று...
48.போர்க்களத்தில் சமாதானக்கொடிகள் ஏந்தும்
வெள்ளைப் புறாக்களும் கைதியின் கூண்டில் சிறை பட்டு
மனிதனின் இரைப்பைக்குள் தண்டனை பெறுகிறது.
49.வாழ்க்கையை உணர்ந்தவன் தத்துவமாய் பேசுகிறான்
வேடிக்கை பார்ப்பவன் பித்தனென அவனை நினைக்கிறான்
50.இலட்சியத்திற்காய் காலத்துடன் யுத்தம் செய்ப்பவன் வாழ்க்கையில்
தோல்வியெனும் முடிச்சின் கயிறு நித்தம் நித்தம் கழுத்தை நெறிக்கிறது