கருகியமலர் சிரிக்கிறது

=======================
அமிலத்தை வீசியுந்தன் அழகழித்துப் பார்த்த
=அவமான சின்னத்தின் அடியொற்றி வந்தவன்
உமிழட்டும் உலகென்று உருக்குலைத்த முகத்தை
=உயர்வான முகமாக உயிர்ப்பிக்க வென்று
சிமிட்டுகின்ற கண்கொண்டு சேதிசொல்லும் பிள்ளைச்
=சிரிப்பினிலே வடுமறந்து சிறப்படைந்த நீயும்
நிமிர்ந்தெழுந்து தாயென்னும் நிசதெய்வ மாகி
=நின்றிருக்கும் இக்கோலம் நிலையான அழகே.

இச்சைக்கு அடிபணிந்து ஏற்றபடி நடக்க
=ஏகியவன் ஆணைக்கு இணங்காமல் மறுத்து
துச்சமென துட்டனவன் துர்குணத்திற் கஞ்சாத்
=துணிச்சலுடன் நீநடந்தத் தைரியத்த்தைக் கண்டு
அச்சமுற்று திகைப்படைந்து அதிர்ச்சியுற்றக் கோழை
=அள்ளியுந்தன் முகத்தினிலே அப்பிவைத்தக் கோரம்
மெச்சத்தகு செயலல்ல மேதினியே சொல்லும்
=மிருகக்குணம் கொண்டதற்கு மனசில்லை என்று.

இச்செயலின் பாதகத்தால் இடிந்தொடிந்து நின்ற
=இளங்கொடிநீ படர்வதற்கு ஏற்றதொரு பந்தல்
இச்சையுடன் போட்டுவிட இதயமதைத் தந்து
=இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட உள்ளம்
நச்சுகுணம் கொண்டிருக்கும் நாகத்தின் உள்ளும்
=நல்லொளியை பரப்புகின்ற மாணிக்கமாய் வாய்க்க
கச்சிதமாய் ஏற்றுக்கொண்டு கணவனன்பால் வாழ்வில்
கருகியமலரே சிரிக்கின்றாய் கருணையின் நிழலில்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Jul-16, 1:53 am)
பார்வை : 96

மேலே