வனப்பும் அவளே வாழ்வும் அவளே

அற்புதமாய், அதிர்ஷ்டமாய் ஓர் பிறவி..
ஒற்றை சலங்கை ஔியில், குடிலின் மகிழ்வை நிரப்பும் தேவதை...
பொறுப்பேதுமில்லை என்றிருந்தனையும், நின் மகிழ்வரவால் மாற்றியமைப்பாய்..
கூடிய கூட்டத்தின் வரவு கண்டு, நாணம் காணும் முதல் நாள் உனக்கு மட்டுமே...
காலமும் ஓடும், உன்னுடனான பயமும் கூடும்...
முடிவது உன் கல்விப்பயணமாயினும், தொடர்வது உன் பயணம்...
அர்த்தங்களும் புரியும், ஆபத்துகளும் விளங்கும்...
அடங்கிய வீடும், அமர்த்தும் உறவுகளும் தாண்டி உலகம் உன்கையில்..
அடக்கும் ஆண் மனம், உன் மணதினத்திற்கு...
விரும்பா மனமாய், விலாசம் கொடுப்பாய் அதற்கும்..
புது பிறவியாய் ஓர் மகிழ்வின் தவழல் தீண்டும் மணநாள்..
கண்ட நிழற்படங்களும், திரைப்படங்களும் காண்பித்த மாதிரியாய், ஓர் துணை நமக்கென்ற உணர்வு...
இல்லகம் மட்டும் கண்டவளுக்கு, இல்லறம் ஓர் புது பயணமே..
கோர்த்த கை கொண்டு, ரேகையும் தேயுமே, அவளுக்கு இந்த மணவாழ்வின் முதலில்...
இங்கும் சில அர்த்தங்களும் புரியும், ஆபத்துகளும் விளங்கும்...
மென்தேகம் அவளுக்கு, பதிலாய் வன்மனமும் செறிவூட்டப்படுமே...
பெண்ணியம் அறியாமலே, ஆண்மகற்காய் பிரதியாவாள்...
அனைத்தும் நிரம்புமே, பிறவியும் திரும்புமே, தன் வயிறு நிறைவுற்றதை எண்ணி எண்ணியே...
அன்பு கலந்து சிறு ஆறுதல் தந்து அடைக்கலம் காக்கும் உற்றவனின் மார்பு மட்டுமே அவள் எதிர்பார்ப்பாய்...
நிறைவடைந்தாள் ,அரை மயக்க வேளையில் தன் மகவின் அழுகுரலில்...
இனி பாரடா என் மகனை, என்று சபதமும் அரங்கேறும் மகவின் வளர்ப்பிற்காய்...
அனைத்தும் மகற்கேயென சன்னியாச நிலை தாண்டுவாள்...
கொண்ட கண்ணாளனின் குணமாற்றமும் விலகி நிற்கும், அவள் குழந்தையை நோக்கையில்...
ஏதும் புரியாது அடிபதித்த வாழ்க்கையில், எல்லாம் திணிக்கப்பட்ட சிலையாவாள்..
அனைத்தும் என் குடும்பத்திற்கே என்றே கூறி அதிலேயே தன் கனவு தொலைத்து, அவர்கள் கனவில் கரைந்து காற்றாவாள் முடிவில்....

எழுதியவர் : சரவணன் (25-Jul-16, 5:52 pm)
Tanglish : alakiya pen
பார்வை : 292

மேலே