திருக்குறளும் திருமந்திரமும்-7

முந்தைய நூற்றாண்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்தது போல் இந்த நூற்றாண்டில் சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் வலுவடையவில்லை என்பது நல்லதாகவே கருதப்படுகிறது. எந்த மொழித் திணிப்பும் ஏற்புடையதல்ல என்பதில் நமக்கு எவ்வித மாறுபட்ட கருத்துமில்லை. மாறாக, பிற மொழிகளை, அவற்றின் இயல்பினை அறிந்திட ஆர்வமாகப் பயில வேண்டும். நமது தாய் மொழி தவிர பிற மொழிகளைக் கற்பதால், அம்மொழிகளின் அமைப்பு, செப்பலோசை, சொற்களஞ்சியம், இலக்கண விதிகள், சொலவடைகள், பழமொழிகள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளும்போது, மனித மூளை தேவையான எண்ணெய் போடப்பட்ட நரம்புகளைப் பெற்று துரித கதியில் செயல்படுவதால், முதுமை வயதுக் கோளாறுகளை அண்ட விடுவதில்லை என அறிவியல் ரீதியில் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பிறிதொரு மொழியை நாம் பயிலுவதற்கு.சாதாரணாக ஒரிரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றால், அந்த ஓரிரண்டு ஆண்டுகளில் நாம் வேறு இரண்டு மொழிகளையும் சேர்த்துப் பயில்வதன் மூலம் கால விரயம் தவிர்க்கப்பட்டு காலச் சேமிப்பு கிடைக்கும்.

மொழிகளுக்கு இடையே உள்ள பேதங்கள், ஒற்றுமைகள், இணக்கங்கள், ஓசை மாறுபாடு போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவற்றிற்கு இடையே உள்ள பந்தமும் நமக்கு எளிதில் விளங்கும். உதாரணமாக ’கரம்’ எனும் தமிழ் வார்த்தை, ஆங்கிலத்தில் arm என்பது ஃப்ரென்சு மொழியில் le bras என்றும் இத்தாலிய மொழியில il braccio என்றும் அதே வார்த்தை இஸ்பானிய மொழியில் El brazo என்றும் சொல்லப்படும் இவற்றை கூர்ந்து கவனித்தோமெனில், செப்பலோசை இறுதி மூன்றிலும் ஒன்றாக இருக்கக் காணலாம். இதனால், நமது வார்த்தை வளத்தை அதிகரித்துக் கொள்ளலாம். தாய் மொழி தவிர்த்துப் பிற மொழிகளைப் பயில்வதால், நமது மூளை மந்த நிலையில் இல்லாமல் சுறுசுறுப்பு அடைகிறது. பிற மொழி இலக்கியங்களைச் சுவைக்கவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும், ஏன் காதலிக்கவும் கூட என்பதுடன், அவற்றின் கலாச்சாரப் புரிந்துணர்வுக்கும் உதவுகிறது. இதனால் மொழிமாற்றங்கள், மொழியாக்கங்கள் அதிக அளவீல் செய்யப்பட்டு, சிந்தனைப் பெயர்ச்சி நிகழ்வதால், நாம் வாழும் உலகமே சின்னதாகி, உலக மயமாவதும் துரிதமாகின்றது..

தமிழில் மட்டுமே புலமை கொண்டு, திருவள்ளுவரும் திருமூலரும் இருந்து இருப்பர் ஆயின், வடமொழித் தத்துவங்களும், சத்தியங்களும் தமிழுக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும். அக்காலத்தில் தமிழோடு பதினெட்டு பாடைகளும் அதில் ஒன்றாக வடமொழியும் கற்றலே முற்றும் கற்றவர் என்ற பான்மைக்கு இட்டுச் செல்லும் போலும். ஆதி சங்கரர், தாம் வடமொழியில் பாடிய சவுந்தர லஹரியில், தமிழில் மூன்று திருமுறைகளை அருளிய சம்பந்தரை,

”தவஸ்தன்யம், மன்யே துகினகிரி கன்யே ஹ்ருதயத:
பய: பாராவார; பரிவஹ்தி சாரஸ்வத்மிவ
தயாவித்யா தத்தம் த்ரவிடசிசு:ஆஸ்வாத்ய தவயத்
கவிநாம் ப்ரெளடானாம் அஜனீ கமனீய: கவியிதா”

எனப் பரவியுள்ளார். இதன் பொருள் என்னவெனில்,

“மலையரையன் பெற்ற மகளே! மார்பில் சுரந்த பாற்கடல் கலைமகளின் கல்விக் கடல்போல் பெருக்கெடுக்கின்றது. கருணை மிக்க உன்னால் கொடுக்கப்பட்ட பாலைத் திராவிட சிசு (தமிழ்க் குழந்தை) பருகித் தலை சிறந்த கவிஞர்க்கெல்லாம் தலைமை பெற்று அழகிய கவிபாடும் ஆற்றலைப் பெற்றது”. திருமுறைகளின் கருத்துக்கள் பல ஆதி சங்கரரின் அருளிச் செயல்களிலும் பொதிந்து உள்ளன. தமிழ் ஆகமம் எனப்படும் திருமந்திரமும் சரி, பொதுமறை எனப்படும் திருக்குறளும் சரி ஏற்கெனவே வடமொழியில் வேதம், ஆகமம், உபனிடதம் என இருந்தவற்றின் தமிழ் சாரமே ஆகும்.

ஏகன், அனேகன், இறைவன் எனப் போற்றப்படும் கடவுள் தன்னை ஒப்பார் இல்லாதவன என அனைத்து கடவுள் சமயங்களும் கூறுகின்றன. .திருவிவிலியத்தில் இணைச்சட்டம் 6-4-5 இல் நாம் இவ்வாறு காண்கிறோம். ”

ஓ. இஸ்ராயேலே கேள். கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே. உன் கடவுளாகிய ஆண்டவரி உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு பலத்துடனும் அன்பு செய்வாயாக” உள்ளது இதனைத் தொடர்ந்து வரும் இறை வசனங்களில் (6 9-10)அவர் தனக்கு ஒப்பாய் ஒருவரும் இல்லை என்பதால் பிற தெய்வங்களை வணங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தனக்கொப்பாய் இல்லாதானைப் போற்றிப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாளே எனப் போற்றும் அப்பர் பின் வரும் தேவாரப் பாடலில்,

கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோமன்றே
மற்றாருந் தன்னோப்பா ரில்லாதனை
வானவர்க ளெப்போதும் வணங்கி யேத்தப்
பெற்றானை பெரும் பற்றப் புலியூரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே (தே.அப்பர். 6.1.2)

எனப் பரவுகின்றார்.

இறைவன், இவ்வாறு தனக்குவமை இல்லாதான் என்பதைப் பாட வந்த மாணிக்கவாசகர், இறைவனை அம்மையும் அப்பனும் நீயே எனப் பின் வருமாறு பரவினர்.

”என்னையப்பாவஞ்ச லென்பவ ரின்றி நின்றெய்த்தலைந்தேன்
மின்னையொப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னையொப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
அன்னையொப்பா யெனக் கத்தனொப்பாயென் அரும்பொருளே”
(திருவாசகம், நீத்தல் விண்ணப்பம் 16.)

அத்துடன் நில்லாமல்,

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

(மாணிக்கவாசகர் திருவாசகம் -540)

என ஒப்புமை உனக்கு இல்லாத ஒருவனே என்று மாணிக்கவாசகர் பாடியதைத் திருவள்ளுவர்,

“”தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லாள்
மனக்கவலை ஆற்றல் அரிது” (திருக்குறள்-7)

என கடவுள் வாழ்த்தில் ஏழாம் பாடலாக யாத்துள்ளார். இதனைப் பரிமேலழகரின் உரையுடன் அர்த்தம் என்னவெனக் கண்டோமெனில்,
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

இதற்கான கலைஞரின் உரைப்படி, இக்குறளில் பொருள் “ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை” என்பதாகும். .

திருமந்திரத்தில், அதைப்போலவே ஏழாம் பாடலில்

“முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாயுளன்
பொன்னை யொப்பாகின்ற போதகத்தானே”. (திருமந்திரம்-7)

பழங்காலத்தொட்டு சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவர்க்கும் பழமையானவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைமகன், அவனை யாரேனும் அப்பன் என வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவிடுவான் அவனே பொன் போன்ற சகஸ்ர தளத்தில் விளங்குபவனே என்பது இதன் பொருளாகும்.

அதர்வண வேதத்தில், அதர்வசிர உபனிடதத்தில், ஈசான மூர்த்தியே உலகம் தோன்று முன்னும் உலகம் அழிந்த பின்னும் சாசுவதமாக இருப்பவர் எனக் கூறுப்பட்டுள்ளது. ஈசானரே, உயிர்களுக்குத் தலைவரானது பற்றிச் சிருட்டியின் திதி நிலையிலும் அவரே தலைவர் என்றும் கூறுகிறது. ஈசானர், ஒளி வடிவில் உயிரில் விளங்குபவர் என்று ஆகமம் கூறும் என்பதால் சகஸ்ர தளத்தில் விளங்கும் சிவன் அத்தனாக இருந்து அருள் செய்வான் என்பதும் பொருளாகும்.

அவனுக்கு இணையான தெய்வம் வேறில்லை என்பதை புறத்தே உலகில் எங்குத் தேடினாலும் கிடைக்காது அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பில் எவரும் இலர், அவன் அண்டத்தைக் கடந்து நின்றபோது பொன் போல பிரகாசிப்பான், சிவப்பு நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ர தளத் தாமரையில் விளங்குபவனாவான் என ஏற்கெனவே ஐந்தாம் பாடலில் கூறியதை மேலும் வலியுறுத்தியே இப்பாடல் அமைந்துள்ளது.

இந்த கருத்தினை சம்பந்தரின் தேவாரம் 2.62.3 இல்”தன்னோர் பிறரில்லானை” என்றும் தனக்கு உவமை இல்லாத கடவுள் பற்றிப் பாடுகின்றனர்.

மேற்சொன்னதைப்போலவே “அறவாழி அந்தணன் என்ற ஒரே சொல்லாடலை இவ்விருவருமே பயன்படுத்தி பிறவா நெறி தரும் பேரருளாளன் இறைவன் எனக் கூறவந்த விடத்து, திருவள்ளுவர்,

“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாக்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” (திருக்குறள்-8)

என்றார். இதற்கான பரிமேலழகரின் உரையை கவனித்தோமெனில்,

“அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

இந்த குறளுக்கு விளக்கம் சொல்ல வந்த கலைஞர்,
“அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே
விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான
காரியமல்ல.” எனக் கூறுகிறார்.

இதே கருத்தை கூறவந்த திருமூலரின் பாடல் எண். 1803

பிறவா நெறிதந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிபராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந்தானே

என்பதாகும். இதன் பொருள்,

“பிறவிக்குக் காரணமாகிய இருளைப் போக்கி ஒளியினைத் தந்த பெருங்கருணையாளனும், சீவனை இன்பத்தில் ஆழ்த்தி மறக்காத வண்ணம் சக்தியப் பதிப்பித்து அருளிய பெரிய பிராணாகிய சிவனும், உதவுவதால் குறையாத தன்மையுடைய கடல் போன்ற தண்ணளியாளனும், மேலான பொருள்களுக்கெல்லாம் மேனவனாகிய இறைவன் அவனை விரும்பியதால் உறவாக வந்து எனது உள்ளம் புகுந்தான்”.

கடலைப்போன்று எடுக்க எடுக்க குறையாத கருணைப் பெருக்கை உடையவன் ஆகிய இறைவன் என்பதை ”அறவாழி அந்தணன்” என்ற ஒரே சொல்லாடல் கொண்டு இவ்விருவரும் குறிப்பிடுவது ஆச்சரியத்திற்குரியது.எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (27-Jul-16, 3:45 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 209

மேலே