இறைமை செய்த பிழைக்கு விமோட்சனம் காண்கிறாள்

வண்ணப் பறவை ஒன்று வையகம் வந்தது
சின்ன அதன் சிறகுகள் விதியால் நொடிந்தது
எண்ணச் சிறகுகளோ எங்கெங்கோ பறந்தது
அன்னமவள் இதயமோ அதன்வழியே துடித்தது

மழைச் சாரலில் ஆடி நனைகிறது
மலைச் சரிவினில் இறங்கி ஓடுகிறது
மரக்கிளைகளில் ஊஞ்சலில் ஆடுகிறது
மணல் பரப்பினில் உழன்று திளைக்கிறது

அலைப் புரவியில் ஏறி மனம் பயணித்தும்
அனல் மேல் விழுந்த பனித் துளியாய்
அடிமனதில் ஆதங்கம் ஆலிங்கனம்
அடுமனையாய் கதிக்கும் உள் மனம்

பிரம்மன் செதுக்கிய அழகிய பதுமை
பாதியோ வெறும் மரப்பாச்சி பொம்மை
பார்த்து உருகிடும் பாசப் பிணைப்புகள்
பாறையாய் இறுகிடும் வேசதார வரன்கள்

மணம் காணும் வயது பருவமோ காயுது
யவ்வனத்தின் ஏக்கங்கள் சொப்பனமாய் கரையுது
வாட்டத்தின் எல்லையிலே வாலிபம் விரையுது
வலுவிழந்த காற்றாக இதயத்தில் மையம் கொண்டது

உணர்வுகளுக்கு அப்பால் சென்று உள்ளங்கள் தேடுகிறாள்
ஊனம் என்ற சொல்லை முற்றுகை இடப் பார்க்கிறாள்
செயற்கை சிறகுகளால் விதியை விரட்ட முயல்கிறாள்
இறைமை செய்த பிழைக்கு விமோட்சனம் காண்கிறாள் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை .அமுதா (28-Jul-16, 12:25 pm)
பார்வை : 76

மேலே