உண்மை வைத்தியனுக்குச் சமாதி....
மதிக்கப்படாத திறமைகளும்
விலைபோகும் கல்விகளுமாய்
ஏங்கிநிற்கிறது வைத்தியத்துறை
புனிதமங்கு மாசுறுகிறது
அதிகாரக் கும்பல்கள்
லட்சங்களும் கோடிகளும்
கொட்டிக்கொடுத்தேனும் பட்டம் சூடிட
கேடிகளாகவே மாறுகின்றனர்
முயற்சியும் வைராக்கியமும் மனதிலேந்தி
படிப்படியாய் எட்டுவைத்து
பாதியில் பறிகொடுத்த உண்மை
வைத்தியர்களின் பரிதாபம்
சேவைக்குப் புகள் தரும்
சேய்க்குச் சேவை தரும்
நோய்க்கு மருந்து தரும்
நோவுக்கு ஆறுதல் தரும்
ஆலயங்கள் மறுக்கப்பட்டு
பெருமைக்கு பெயர்கொடுத்து
வெறுப்புக்கு வழிகொடுத்து
சலிப்புக்கு நிகர் கொடுத்து
சஞ்சலங்களை உருவாக்கிறது
பணம்கொடுத்து வைத்தியனானேன்
பணமழித்து சேவை பெற்றுக்கொள்ளென
மார்தட்டும் ஈவிரக்கமற்ற
வைத்தியரையெப்படி குற்றம் சொல்வது
சமுகத்தின் தலையெழுத்திது
சதிகார அரசியலின் தலையெழுத்திது
சரித்திரத்தை வென்றிடாத
சட்டங்களின் தலையெழுத்திது
ஏழ்மைக்கும் என்னாட்டிற்கும்
நன்மை செய்வேனென நினைத்து
நிராசையான வைத்தியனே உன்
நல்லெண்ணத்திற்கு என் வீர வணக்கங்கள்