தீர்க்கமுடியாத நன்றிகள்...
அன்னைக்கு ஒரு நிபந்தனை
அடுத்த ஜென்மத்திலும்
நீ அன்னையாக வேண்டாம் எனக்கு
எல்லா ஜென்மங்களுக்கும் சேர்த்தே
அன்பை அள்ளிக் கொடுத்து விட்டாய்...
போதும் போதும் என நான் சொன்னால்
நீ என்ன கேட்கவா போகிறாய்?
உன் கையின் சுருக்கங்கள்
இன்று நான் கண்டவுடன்
சுருங்கித் தான் போனேன் உள்ளம்...
ஒவ்வொரு சுருக்கத்திலும்
உன் தோல் சொல்கிறது
எத்தனை தடவை நீ அன்பு செய்தாய்
எத்தனை தரம் நீ சோறூட்டினாய்
இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்
என்று நீ கேட்கும் குரலில்
கலப்படமில்லாத அன்பு தெளிக்குமே
என் இதயம் நனைத்து நிறைக்குமே...
உன் கருணைக்கு முன்னால்
என் சாமர்த்தியமும் சாதுர்யமும்
பொய்களும் அநியாயங்களும்
செல்லாக் காசாகிப் போனதே...
நோய் வந்தாலும் உடன் இருந்து
உள்ளன்போடு என்னைப் பேணுவாய்...
சின்னச் சின்ன வேலைகள் செய்தாலும்
அப்படி என்னைக் கொண்டாடுவாய்...
இன்று நீ தளர்ந்து விட்டாய்...
நான் இருக்கிறேன் உனக்காக என்று
என்னிடம் நீ சொல்லவே தேவை இல்லை...
நான் எதுவும் சொல்வதற்கு
யோக்கியதை எனக்கில்லை...
உன் அன்பிற்காய் சாகலாம்...
காதலோ கத்திரிக்காயோ
எதற்கும் மயங்காமல்
என்னைக் கட்டிப் போடும்
உன் கருணை உள்ளம்...
உன் வார்த்தை தான் எனக்கு வேதம்...
இருந்தாலும் உன்னுடன் உட்கார்ந்து
நானும் வெகு நேரம் பேசுவதில்லை...
நீயும் என்னைக் கேள்வியே கேட்பதில்லை...
இத்தனை பொறுமையை எங்கு கற்றாய்?
எனக்கு ஏன் உன்னிடம் பொறுமை இல்லை?
தந்தை எத்தனை சம்பாதித்தாலும்
அறிவோடு திறமை பல இருந்தாலும்
அன்னையின் அன்பிற்கு முன்னால்
எதற்குமே தராசுத் தட்டு சாய்வதில்லையே...
பொருளுக்கெல்லாம் பொருள் இல்லாமல் செய்து விட்டாய்...
கண் மூடி சிந்தும் ஒரு துளியும்
உனக்குத் தெரிந்தால் துடித்துப் போவாயே...
உனக்கே உனக்காய் நான் என்ன செய்தேன்?
ஒன்றுமில்லை என்று எனக்குத் தெரியும்...
தேவைப் பட்டால் கேட்பாயா?
சம்பாதித்து வீடு வாங்கச் சொல்வார்
சம்பாதித்து குடும்பம் உயர்த்தச் சொல்வார்
ஆனால் நீ நூறு ரூபாய் கேட்கிறாய்
ஒரு பிச்சை போல்...
காரணம் கேட்டு சிரித்தேன் அப்போது...
வரும் காலத்தில் நான் உனக்காக
ஒன்றும் கொடுக்கவில்லையே
என்று நினைத்து வேதனைப்பட்டு
நான் கலங்கக் கூடாது என்பதற்காய்
என்னிடம் யாசிக்கிறாய்...
தாய்ப் பாசத்தால்
அருவி போல் குளிப்பாட்டி
எனக்கு ஆனந்தத்தை மட்டுமே கொடுக்கும்
என் அன்னைக்கு
இன்பம் கொடுக்கிறேனோ இல்லையோ
ஒரு துன்பம் கொடுக்காமல்
வாழ்ந்து விட்டால் போதும்...
சொத்திலே பெரிய சொத்து நீ...
என்னை விட்டுப் போய் விடாதே என்று
உன்னைப் பார்த்து கேட்க மாட்டேன்...
உனக்கு எது நல்லதோ அது
நன்றாய் நடக்கட்டும்...
அம்மாவைத் தாரை வார்ப்பது கஷ்டம் தான்...
உன் சந்தோஷமே முக்கியம் என்று
நானும் நினைக்கத் தான் வேண்டும்...
இருக்கும் வரை இந்த ஜென்மத்தில்
எனக்கு எல்லாமும் நீ தான்...
நல்லன பல சொல்லிக் கொடுத்தாய்
அதில் பாதியாவது தேறும் என்னால்...
என்றும் என் நெஞ்சத்தில் நீயே...
உன் கஷ்டங்களைத் தூசியாக்கி
என் சந்தோசம் கெடாமல்
பார்த்துக் கொண்டாய்...
அதை சொல்லிக் காட்டவும் மாட்டாய்...
உன் அன்பிற்கு என் முத்தங்கள்...
நான் உனக்குப் பிறக்க
நீ தவம் செய்யவில்லை...
ஆனால் நீ எனக்கு
அன்னையாய்க் கிடைக்க
நான் ஏதோ தவம் நிச்சயம் செய்திருக்கிறேன்...
வளர வளர பேச்சு குறைகிறது
ஆனால் அன்பு குறைவதில்லை
உன் மடி என் சொர்க்கம்
உன் சாப்பாடு எனக்கு அமிர்தம்
உன் கருணை என் உயிருக்கு ஜீவன்...
ஒன்று உன்னிடம் கேட்க வேண்டும்...
நீயே அடுத்த பிறவியிலும்
அம்மாவாய் வருகிறாயா?
சுயநலம் தலை தூக்குகிறது....
நான் நல்ல குழந்தையாய் இருப்பேன்...