இவன் வாழ்க்கை இப்படித்தான்
நிஜங்களை மட்டும் சுரக்கும்
மனிதத்தை கிடைக்காதென்றும் நான் வேண்டுவதேன்....
மீண்டும் மீண்டும் என்னை நோக்கி ஓடி வரும் சுயநல தேவைகளை நான் மறுக்காமல் ஏற்பதேன்...
பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் என் மனம் ஏன் உண்மையை உருக்கி பிரிப்பதேன்...
என்றுமே கிடைக்காத பூரண அன்பை ஒவ்வொரு மனிதரிடமும் தேடுவதேன்...
நேர்மையை சுமந்து செல்லும் என் கால்கள் நெருக்கத்தை விட பிரிவுகளை நோக்கியே விரைவதேன்...
காத்திருக்க வைக்காத சத்தியத்தை
கொடுக்கும் இதயத்தை காண அலுப்பில்லாமல் ஓடுவதேன்....
கடவுளின் உருவத்தை கருப்பு புத்தகங்களில் கரைத்து ஊற்றி விட்டு "அவன் எங்குமில்லை" என்று பிதற்றி திரிவதேன்...
அவர்களது கைகள் நியாமற்றவை என்று உணர்ந்திருந்தும் பல்லை இளித்து
கொண்டு கோர்த்துகொள்வதேன்...
ஆசைகள்,விருப்பங்கள், பிடித்தவைகள் என ஆயிரமாய் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு
பின் அம்மா,அப்பா,மனைவி,மகன்,மகள்
என ஒவ்வொரு முகங்களையும் முன்னிறுத்தி கழித்துக்கொள்வதேன்...
நான் என்னும் உண்மையான ஒருவன்
தான் என்னும் வாழ்க்கைக்குள்
ஒளிந்துகொண்டு
எங்கேயும் எவரிடமும்
முகம் காட்டுவதில்லை இப்பொழுதெல்லாம்...
ஏனெனில் இவன் வாழ்க்கை
இப்படித்தான்...