கணவனின் தாலாட்டு

என் அவளுக்கு தாலாட்டு ...

பெண்ணே
உன் குரல் கேட்ட
மந்திரத்தில் -நம்
குழந்தை சட்டென்று தூங்கிவிடுகிறது
உன் தாலாட்டில் ....

ஆனால்
நீயோ என் தோள் சாய்ந்து
வார்த்தை கெஞ்சலிலும்
விழியின்
வழி அகிம்சை போராட்டம்
செய்கிறாய்
என்னை தாலாட்டு பாட
சொல்லி....

நானும் பாடினேன்
மறுக்க முடியாமல் -என்
முரட்டு குரலில்
எனக்கு தெரிந்த நாட்டுப்புற மெட்டில்
உன் முகம் பார்த்து - ஆகா ...
நீயும் உறங்கிவிட்டாய்
பெருமை பொங்கியது
என் தாலாட்டுக்கு .....

திரும்பி படுத்தேன் - நம்
குழந்தை திரு திருவென விழித்து
கொண்டிருந்தது...
பக்கத்து அறையில் அம்மாவும்
விழித்துகொண்டார் போல
தண்ணீர் குடமும் தான்...

பிறகென்ன என் தோளில் குழந்தை
ஆழ்ந்த உறக்கத்தில் நீ
சற்றுதூர வெட்கத்தில் நான்...

அன்பே
என் முரட்டுகுரல் கூவல் அல்லவா
உனக்கு சங்கீதம் ...
உன் காதலின் ஆழத்தை உணர்த்தியது
அன்றைய இரவு நீளம்
என் தாலாட்டில் ...

சில இரவுகளில்
குழந்தைதான் பாவம்
அழாமல் இருந்தால் சரி தானே...
இல்லை இல்லை
அதற்கும் பழகிவிடும்
பக்கத்து அறையிலுள்ள
அம்மாவை போல என்கிறாயா....

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (1-Aug-16, 11:17 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 366

மேலே