தாய்மை
பொசுங்கிடும் களர் நிலம் மேலே,
பூத்த புதுச்செடியாய்த் தாய்மை.
உதிரத்தை உணவாய் ஊட்டி,
உயிர்ப்பிக்கும் உலகம் தாய்மை.
பெண்மையின் படைப்பே இங்கு,
பேருலகம் இசைவாய்ச் சுழல,
பெண்மையில் தாய்மை இன்றேல்,
ஆண்மைக்கு என்ன வேலை ?
சந்ததிச் சாகரம் தன்னை,
சடுதியும் வற்றி விடாமல்,
சந்தானச் செல்வம் அளிக்கும்,
சந்தோஷம் நிறைக்கும் தாய்மை.
ஈரைந்து மாதச் சுமையும்,
இன்பமாய்ச் சுமந்து நிற்பாள்.
இமைகளே மூடா விழியால்,
இளவலைக் காக்கும் தாய்மை.
தானுண்ணா போதும் மகற்குத்
தன் பசி தீர்க்கும் தாய்மை.
நோய் நொடி அணுகாது காத்து,
நோகிடாதே வைக்கும் தாய்மை.
பெண்மையைத் தெய்வம் என்றால்,
தாய்மைக்கு வார்த்தை ஏது ?
தெய்வத்தின் தெய்வம் என்றே,
ஏற்றியே புகழ்வோம் நாமே !
- கமலா சரஸ்வதி (தமிழ் பட்டறை)