​யார் குற்றம்

யார் குற்றம் ?

குற்றுயிராய்
குப்பைத் தொட்டியில் ...
​சிற்றெரும்புகள்
கடிக்கும் நிலையில் ...
உருவான கருவை
வீசிய நிலையில் ....
சிசுவான நான்
சிதறிய நிலையில் ...

கருவாக உருவாக்கும்
பருவத்தின் கோளாறா ?
பருவத்தின் வீரியத்தால்
விளைந்திடும் தவறா ?
யார் குற்றம் ...?

நேரிட்டத் தவறால்
போரிட்ட உடல்களா ?
இளமையின் வேகத்தால்
இன்னுயிர் தோன்றியதா ?
யார் குற்றம் ...?

விரகத் தாபங்களின்
விளிம்பின் அடையாளமா ?
தாபங்களில் தடுமாறும்
தாண்டவக் கோலமா ?
யார் குற்றம் ...?

​கள்ளக் காதலர்களின்
எச்சத்தின் எழுத்தா ?
மிச்ச்சத்தின் மிகுதியால்
தடைமீறிய எடைக்கல்லா ?
யார் குற்றம் ...?

தடைமீறிட தூண்டிடும்
உடைமாற்றம் காரணமா ?
நடைமுறை தவறிடும்
கடைவீதி சிலைகளா ?
யார் குற்றம் ...?

சாதியென்றத் தடைக்கல்லா
வீதிக்குவந்ததும் காரணமா ?
குப்பையில் வீசியதும்
குப்பையான நெஞ்சத்தாலா ?
யார் குற்றம் ...?

பெண்ணாகப் பிறந்ததால்
கல்லானதா நெஞ்சமும் ?
கண்ணாக வளர்க்காமல்
வீசியெறிந்த விஷங்களா ?
யார் குற்றம் ...?

தான்வாழ தன்மானம்விற்று
சன்மானம் பெறுவோரா ?
விரக்தியின் விளிம்பில்
செல்வோரின் காரியமா ?
யார் குற்றம் ...?

விதியென்று கூறுவோரே
வழியொன்று காண்பீரே !
குறுகுறு நெஞ்சங்களே
குற்றத்தைத் தடுப்பீரே !

யார் குற்றம் ...? யார் குற்றம் ...?
ஆய்வதைவிட கண்டிடுவோம்
வழியொன்றும் நிரந்தரமாய்
இனியேனும் நிகழாமல் இருக்க !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Aug-16, 2:27 pm)
பார்வை : 682

மேலே