குரோதம் மற

யாருக்கும் எதிரியல்ல
நாங்கள் யாருக்கும் பாவிகளல்ல


நண்பா நாங்களும் நீங்களும்
சுமந்து இருப்பது காலத்தின்
ரணங்களை


நாங்களும் நீங்களும்
தேடித்திரிவது சீழ்பட்ட புண்ணிற்கு
ஆழமான மருந்தொன்றை


நாங்களும் நீங்களும்
அடைய விரும்புவது நீதியில்
நியாயத்தை


நாங்களும் நீங்களும்
வலிந்து கேட்பது நிம்மதியான
சுவாசத்தை


நாங்களும் நீங்களும்
கட்டிக்கொள்ள விரும்புவது
ஸ்திரமான எதிர்காலத்தை


நாங்களும் நீங்களும்
பத்திரப்படுத்திக்கொள்ள விரும்புவது
கடந்துபோன காலங்கள்
கற்றுத்தந்த பாடங்களை
உதிர்ந்துபோன உறவுகளை


நாங்களும் நீங்களும் மீள
கட்டிக்கொள்ள விரும்புவது
இழந்துபோன நம்பிக்கையையும்
இடிந்து போன உறவின் சுவர்களையுமன்றி
கோபங்களையும் குரோதங்களையும் அல்ல
வெறுப்புகளையும் வேதனைகளையும் அல்ல


நண்பா நாங்களும் நீங்களும்
சிந்திக்க வேண்டியது ஒன்று தான்
நாங்களும் நீங்களும் எதிரியல்ல


நாங்களும் நீங்களும் தேடித்திரிவது
நீதியின் தேசத்தில் சீழ்பட்ட புண்ணுக்கு
ஆழமான மருந்தொன்றை

எழுதியவர் : சர்மிலா (3-Aug-16, 3:58 pm)
பார்வை : 66

மேலே