உண்மை நட்பு

உற்றம் சுற்றமென ஆயிரமிருந்தும்
--குறையிலா உறவு நட்பொன்றே !
உறவுகள் இருப்பர் நமைச்சுற்றி
--உண்மை உள்ளங்கள் நட்பொன்றே !
இதயங்கள் இணைந்திடும் இவ்வுலகில்
--உறவென்று நிலைப்பது நட்பொன்றே !

உள்ளத்தில் உள்ளதைக் கூறிடுவோம்
--உணர்வைத் தவறாது பகிர்ந்திடுவோம் !
உண்மையை உள்ளபடி உரைத்திடுவோம்
--உதவிகள் செய்திடவும் துடித்திடுவோம்
உளமார ஒப்புக்கொள்வீர் இவைகளை
--உண்மை நட்புகளின் பரிமாற்றமென !

ஆபத்து என்றவுடன் அவசரஉதவிக்கு
--அழைப்பதும் நாம் நண்பரைத்தான் !
துயர்மிகு நேரங்களில் துணைநமக்கு
--துன்பத்தில் பங்குபெறும் நண்பர்தான் !
மனக்கசப்பு வந்தாலும் மறந்திடுவர்
--மகிழ வைத்திடும் நண்பரவர் !

இருட்டில் துணையாவது ஒளியன்றோ
--இக்கட்டில் உதவுவது நட்பன்றோ !
ஆதரவாய் அணைப்பது அகிலத்தில்
--அன்றும் இன்றும் நட்பன்றோ !
கலங்கிடும் நெஞ்சங்கள் களிப்புற
--ஆறுதல் அளிப்பதும் நட்பன்றோ !

நட்பிலும் உள்ளது பலவிதங்கள்
--நானிலத்தில் உற்றது உண்மைநட்பே !
கவர்ந்தவர் நம்மை பலருமுண்டு
--சிறந்தவர் நட்பால் புரிந்தவரே !
உண்மை நட்பிற்கு அழிவில்லை
--அறிந்தவர் இதனை அதிகமில்லை !

உண்மை நட்புடன் வாழ்ந்திடுவோம்
--உலகை நம்முடன் இணைத்திடுவோம் !
காலமும் நட்பிற்கு கரங்கொடுப்போம்
--உண்மை நட்பிற்கு உயிர்கொடுப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Aug-16, 2:48 pm)
பார்வை : 1399

மேலே