காவல்துறை நிர்வாகம் - தேவை ஒரு சீராய்வு
அண்மையில் ஆர்.கே.ராகவன் (முன்னாள் சிபிஐ டைரக்டர்) மற்றும் டி.சிவானந்தன் (முன்னாள் ஆணையர் மற்றும் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், மகாராஷ்டிரா) இருவரும் இணைந்து இந்து ஆங்கில தினசரி இதழில் (11-7-16) காவல்துறை பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்கள்.
அதில் அவர்கள் காவல்துறை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். நகரில் காவல்துறையின் அறிவுப்பூர்வமான, முழு அளவிலான செயல்பாடு தேவை என்பது பற்றி நிறையவே கருத்துக்களை வழங்கியுள்ளார்கள். நாட்டின் துயரமே சாதாரண மக்களுக்கு இவை பற்றியெல்லாம் தெரிய வழியில்லை என்பது தான்.
காவல்துறை நிர்வாகம் என்பது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த “சீதனம்”. காலனி ஆட்சியில் இந்தியாவில் மக்களை அடிமைகளாக ஆண்ட காலத்தில் அவர்களை அடக்கி ஆள, மக்கள் அச்சத்தோடு வாழ கொண்டு வந்த அடக்குமுறை கருவி. இந்த நிர்வாக முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கால கட்டமே ஒரு முக்கியமான கால கட்டம்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து 1857ம் ஆண்டு நடந்த, ஆங்கிலேயர்களால் ‘சிப்பாய் கலகம்’ என்று வர்ணிக்கப்பட்ட கால கட்டத்தில் கொண்டு வந்த சட்டம் தான் இது. புரட்சியைக் கண்டு உஷார் ஆகி விட்ட ஆங்கிலேய அரசு நான்காண்டுகளில் போலீஸ் சட்டம் 1861 கொண்டு வந்துவிட்டது. ஸ்தல மக்களை அச்சத்தோடு அடக்கி வைக்க இந்த நிறுவனம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. தாய் தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகிறத போது கூட, உண்ண மறுக்கும் குழந்தையிடம், போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என பயம் காட்டி சோறு ஊட்டும் பழக்கம் இருந்ததை நாம் மறக்க முடியாது.
ஆங்கிலேயர்கள் மிகத் திறமை சாலிகள், நம் இந்திய மக்களுக்கே போலீஸ் சீருடை கொடுத்து, நம் வரிப்பணத்திலேயே அவர்களின் சம்பளமும் கொடுத்து (ரூ.12/- மாதச்சம்பளம்) அவர்களிடம் தடியும் கொடுத்து, நம் மக்களையே அடித்து, உதைத்து, சுட்டுக் கொல்லவும் பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்கள். இவர்களுக்கு உத்தரவு இடுவதெல்லாம் மேல் மட்டத்தில் அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள்தான். இவர்கள்
கீழே இறங்கி மக்களோடு நேரிடையாக மோத மாட்டார்கள். ஆனால் இவர்களின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக அமல்படுத்தக்கூடிய இயந்திரங்களாக நம்மவர்களை கீழ்மட்ட போலீஸ்காரர்களாக வைத்திருந்தார்கள். கடுமையான கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். நாட்டு மக்கள் அவர்களுக்கு எதிரிகள். ஆணையிடும் அதிகாரிகளாக, ராணுவத்துறையில் பணிபுரிந்த ஆங்கிலேயர்களையும், இங்கிலாந்து உயர்குடி மக்களின் வாரிசுகளையும் தருவித்து நியமனம் செய்தார்கள். ஆரம்பத்தில் காவல்துறைக்கு பெயரே Imperial Branch of the Colonial Police Service என்றுதான் பெயர். நியமனம் செய்யும் அதிகாரமும் லண்டனிலிருந்து செயல்பட்ட ஆங்கிலேய அரசு செயலாளரிடம் தான் இருந்தது. அதன்பிறகு ராணுவத்திலிருந்து அதிகாரிகளை எடுக்கும் முறை மாற்றப்பட்டு, Indian Police Service என்று பெயர் மாற்றப்பட்டு, லண்டனில், தேர்வு முறை பரீட்சை வைத்து ஆங்கிலேயர்களை அதிகாரிகளாக நியமித்தார்கள்.
ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லோரும் இந்த நாட்டு மக்கள் என பிரகடனம் செய்யப்பட்ட பின்னும், ‘குடியரசு’ கோலோச்சிய பின்னும் ஆட்சிஅதிகாரத்துக்கு வந்த ஆளும் வர்க்கம், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட போலீஸ்துறை தங்களுக்கும் ஆட்சி நடந்த அனுகூலமாக இருந்ததால், கொள்கை மாற்றம் ஏதும் இல்லாது அந்த நிர்வாக முறையை அப்படியே ஏற்றுக் கொண்டது.
The Indian Police Act 1861, The Indian Penal Code (IPC) of 1862 (amended in 1993) ,The Indian Evidence Act (IEA) of 1872, The code of Criminal Procedure (CRPC) of 1861 (revised in 1898 and 1973)
ஜனநாயக நாட்டில் காவல்துறையை ஜனநாயகப்படுத்தி இருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளாக காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள், கண்டனங்கள், மக்கள் இயக்கங்கள் நடந்த பின்னும், ஆட்சியாளர்கள், ஆளும் வர்க்கம் அசையவே இல்லை. ஆனால் அவ்வப்போது மக்களின் ஆவேசம் எழுந்த போதெல்லாம், ஆவேசத்தை ஆறப்போட நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரால் அவ்வப்போது கமிசன் வைத்தார்கள். Core Committee on Police Training 1971-1973, National Police Committee 1977-1981, Riberiro Committee of Police Reforms 1998, Padmanabhiah Committee on Police Reform 2000, Group of Minister on national Security 2000-2001, Malimath Committee on Reforms of Criminal Justice System 2001-2003. இதோடு சில மாநில அரசுகளும் அவ்வப்போது கமிட்டிகளை வைத்தன. முதன்முதலாக கேரள மாநிலம் கேரள போலீஸ் கமிஷன் 1959 வைத்தது.
பீகார்போலீஸ் கமிஷன் 1961, பஞ்சாப் போலீஸ் கமிஷன் 1961-62, மேற்குவங்க போலீஸ் கமிஷன் 1960-61, தமிழ்நாடு போலீஸ் கமிஷன்-(2006), (1969), (1989) – இப்படி கமிஷன்கள் வைக்கப்பட்டதெல்லாம் சரி. ஆனால், அவைகளின் பரிந்துரைகள் எவ்வளவு தூரம் அமலாக்கப்பட்டன என்பதுதான் கேள்வி.
கமிஷன்கள் கூட அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சனைகள், சங்கடங்கள், அத்துமீறல்கள் பற்றி நிறையவே பரிந்துரைகளை வழங்கினவே தவிர, போலீஸ் நிர்வாக அமைப்பில் அதன் கட்டுமான அமைப்பில் உள்ள கோளாறுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அவைகள் தீர்க்கப்பட வழிகள் காணப்பட்டது குறைவுதான்.
சில நேரங்களில் நீதிமன்றங்கள் தான் தலையிட்டு சில வழிகள் கண்டுரைத்துள்ளது. உதாரணம் மேற்கு வங்கஅரசுக்கும், டி.கே. பாசு என்கிற பிரஜைக்கும் நடந்த ரிட் பெட்டிசன் வழக்கில் 1996 உச்சநீதிமன்றம் சரியாகவே தீர்ப்பு வழங்கியது.
ஒரு குடிமகனை ஒரு போலீஸ் கைது செய்யும் போது என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற 11 வகையான வழிகாட்டுதலை தந்தது. அதை ஆணையாக எல்லா மாநில அரசுகளும் வெளியிட்டன. ஆனால், அவை நடைமுறையில் எவ்வளவு தூரம் இதய சுத்தியோடு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. பல அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. இந்த அத்துமீறல்கள் எப்படி தடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை.
மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை அவர்களின் உணர்வில், சிந்தனையில், செயல்பாட்டில் இது மக்களின் பாதுகாப்புக்கான துறை என்ற கண்ணோட்டத்தை, மன மாற்றத்தை பயிற்சியிலேயே உருவாக்க வேண்டும், ஊட்டப்பட வேண்டும். அத்துமீறினால் கடுமையான தண்டனையும் அமலாக வேண்டும், அதற்கு முன் உதாரணங்களும் இருக்க வேண்டும். இது தான் காவல்துறையை ஜனநாயகப்படுத்துவது என்பது.
போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
Transparancy International India in 2005 ஆய்வு நடத்தி கீழ்க்கண்ட நிலையை அறிவித்துள்ளது. “விசாரணையில் 87 சதவிகித மக்கள் போலீஸ் துறையில் லஞ்சம் வாங்கும் முறை உள்ளது என்றும், 74 சதவிகித மக்கள் போலீசின் சேவை தரம் போதிய அளவு உயரவில்லை என்றும், 47 சதவிகித மக்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவே லஞ்சம் தர கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பதிவு செய்துள்ளது.
அதோடு இந்தக்குழு ஒரு முக்கிய தகவலை தந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த அரசு துறைகளிலும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச லஞ்சம் போலீஸ் துறையில் தான் உண்டு என்று பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில போலீஸ் கமிஷன் கூறுவது: “புகார் செய்ய வரும் பொது மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுவது, பயமுறுத்துவது, அவமானப்படுத்துவது, சாட்சியங்களை அழிப்பது? பொய் சாட்சியங்களை உருவாக்குவது, பொய் வழக்குகளைப் போடுவது” – எனப் பதிவு செய்துள்ளது.
தேசிய போலீஸ் கமிஷன் அறிக்கை “சந்தேகப்படும் நபரை அல்லது குற்றவாளி
யை கொடுமைக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்வது அடிக்கடி நடைபெறுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது. காலை மேலே தூக்கிக் கட்டி, பாதங்களில் தண்ணீர் ஊற்றி, ஊற்றி இரும்புக் கம்பியால் அடிப்பது, (இதற்கு பெயர் லாடம் கட்டுவது) விரல்களில் ஊசி குத்துவது, உடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உடம்பு பூராவும் தடியால் அடிப்பது, தலைகீழாக கட்டி விட்டு அடிப்பது, மலத்தை கரைத்துக் கொடுத்து குடிக்கச் சொல்லி நைய்யப்புடைப்பது, ஆண் குறியில் ஊசியை குத்துவது (Third degree method) அடித்தே கொல்லுவது, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லுவது – இப்படிப்பட்ட கொடுமைகள் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக சர்வசாதாரணமாக நடக்கின்றன.
பெண்களும் இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. கூடுதலாக பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாகிறார்கள். மாலி மாத் கமிஷன் “இதுபற்றி சரியாகவே சொல்லியுள்ளது. “இந்தியாவில் போலீஸ் புலன் விசாரணை என்பது மிக கீழான நிலையில் உள்ளது. இந்தப் புலன்விசாரணை தன்மையை மேம்படுத்த கணிசமான அக்கறை தேவைப்படுகிறது. முயற்சிகள் தேவைப்படுகிறது” – என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அகில இந்திய அளவில் போலீசுக்கான நடைமுறை விதி உள்ளது. அதில் 13
வகையான நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறப்பான விதிகள் எழுத்தில் மட்டுமே உள்ளன. அவ்வளவே ! “போலீசின் அடிப்படை கவுரவமே அதன் உச்சபட்சமான “நேர்மை” என்பதுதான். அந்த நேர்மையை அங்கீகரித்துக் கொண்டு மிக கவனமாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரிசுத்தமாக வாழவேண்டும், தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்,
எண்ணத்திலும், செயலிலும் உண்மைக்கும், சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு, பணிவாழ்க்கையிலும், சொந்தவாழ்க்கையிலும் செயல்பட வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை சீரிய முன் உதாரண பிரஜைகளாகக் கருது
வார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவலர்களும் இந்த சமூகத்திலிருந்து வருகின்றவர்கள் தான். இந்த சமூகத்தில் நிலவும் தீய பழக்கங்கள், மனப்போக்குகள் பற்றியிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? வேலை தேடி போலீசுக்கு வருகிறவர்கள் தான் ஏராளம். ஆகவே, பயிற்சி காலத்திலேயே சமூகத்தைப் பற்றிய, மக்களைப் பற்றிய மரியாதையை, மதிப்பை கற்றுத்தர வேண்டும், போதிக்க வேண்டும். பயிற்சி காலத்திலேயே சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி செயல்பட வைக்க வேண்டும். தனிப்பட்ட மனிதரானாலும், சமூகமானாலும் அதற்காக தொண்டு புரிவதே தன் பணி யின் கடமை என்பதை அவர்களின் கலாச்சாரமாக மாற்றப்பட வேண்டும்.
l துறையில் அரசியல் தலையீடு, அரசியல் நோக்கோடு பதவி உயர்வு, மாற்றல், வேலை நியமனம் ஒழிக்கப்பட வேண்டும்.
l அதிகபட்சமான வேலை சுமைகளை சுமத்தி அதன் விளைவால் சிறப்புஆளுமை பணிதிறமைகள் பாதிக்கப் படுவது தடுக்கப்பட வேண்டும்.
l போலீஸ் துறை தனி சுதந்திரம், உரிமை பெற்ற அமைப்பாக மாற்ற வேண்டும்.
l போலீஸ்துறை, மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாகவும், வெளிப்படைத்தன்மை கொண்ட, மக்களுக்கு பதில் சொல்லும் அமைப்பாகவும் இயங்க வேண்டும்.
l சுதந்திரமாக செயல்படும் புகார் கமிஷன் செயல்பட வேண்டும். இது பிரிட்டனில் வெற்றிகரமாக செயல்படுகிறது.(Independent Police Complaint Committee)
l வழக்குகள் வாய்மூலமாக சொல்லும் காட்சி, நேரிடையாக பார்த்த
சாட்சி தேவையென்றாலும் அவைகள் காலப்போக்கில் தடம் மாறும் வரலாறு
உண்டு
!. எனவே நீதிமன்றத்திற்குரிய Forensic Science laboratory-யை மிக நவீனப்படுத்தப்பட வேண்டும். உலகிலேயே முதன் முதலாக இந்தி
யாவில் தான் 1897ம் ஆண்டு Forensic Science laboratory கண்டுபிடிக்கப்பட்டு துவக்கப்பட்டது. இது சம்பந்தமான ஆய்வுக் கூடங்கள் இந்தியாவில் வெறும் 23 தான். அமெரிக்காவில் 203 ஆய்வுக் கூடங்கள் உண்டு.
l மத்திய அளவில்Detective Training School மூன்று தான் உள்ளன. இது மேலும் உயர்த்துவதோடு துப்பறியும் விஞ்ஞான முறை மேலும் நவீனப்படுத்தப்பட வேண்டும். நவீன உபகரணங்களையும் சேகரிக்க வேண்டும்.
l உயர் பதவி நியமனம், பதவி உயர்வு, மாற்றல் போன்ற விஷயங்கள் கொலிஜியம் Collegium(உரிமைக்குழு) உருவாக்கப்பட வேண்டும்.
l தவறுகளை கண்காணிக்க, குறைகளை தடுத்திட சுதந்திரமாக செயல்படும் குறைநிவர்த்திக்குழு செயல்பட வேண்டும்.
l மக்கள் எண்ணிக்கைக்கும், போலீசாரின் எண்ணிக்கைக்கும் இடையில் எண்ணிக்கை வித்தியாசம் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6 கோடியே 85 லட்சம் பேர்.ஆனால் போலீசார் 80 ஆயிரம் தான்.பெரிய இடைவெளி. எனவே காலியிடங்களை நிரப்புவதோடு, வேலை சுமைகளை குறைக்க மேலும் நியமன எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
l தொழிற்சங்க அமைப்பு உருவாக்க அனுமதி தர வேண்டும்.துறையின் வளர்ச்சிக்கோ, சீர்திருத்தத்திட்டங்களுக்கோ கூட ஆலோசனைகள் வழங்க தொழிற்சங்கத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
| 2006 ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இதுவரை மத்திய மாநில அரசுகள் காவல் துறை மீது பொது மக்கள் புகார் அளிக்க ஒய்வு பெற்ற நீதிபதிகளை உறுப்பினர்களாக கொண்ட சுந்திரமான காவல் புகார் ஆணயத்தை அமைக்கவில்லை. இந்த ஆணயத்தை அமைத்தால் பெருமளவு காவல் துறையில் லஞ்சம் வாங்குவது குறையும்.
எழுதியவர்
ஜெ.கமலக்கண்ணன்
வழக்கறிஞர்
உயர் நீதி மன்றம் சென்னை
நன்றி: முகநூல்