பக்தி இலக்கியம் ----படித்ததில் பிடித்த ஆன்மிகம் தொகுப்பு கட்டுரை

பாளையங்கோட்டை பகுதியை ஆண்டு வந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் மற்ற சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே.

அவர் திருச்செந்தூர் முருகன்மேல் வைத்திருந்த பக்தி சிலர் மட்டுமே அறிந்தது. அரண்மனையில் இருக்கும் நாட்களில், திருச்செந்தூர் ஆலயத்தில் பூஜை நடப்பதற்கு அறிகுறியான ஆலயமணி ஓசையைக் கேட்ட பிறகே உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார் கட்டபொம்மன். மணியோசையைக் கேட்க அவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையே ஆறு இடங்களில் ஆட்களை நியமித்து, பூஜை நடக்கும் சமயத்தில் மணி அடித்தவுடன் பறை ஒலி எழுப்பக் கூறியிருந்தார். ஆலய மணியோசையைக் கேட்டவுடன் கோவிலுக்கு அருகே நியமிக்கப்பட்ட முதல் ஆள் பறையொலி எழுப்பி இரண்டாவது மைல் கல்லில் உள்ள ஆளுக்கு உணர்த்துவார். அந்த ஓசையைக் கேட்டு இரண்டாவது ஆள் பறையொலி எழுப்புவார். இப்படி அடுத்தடுத்து பறையொலி எழும்ப, அரண்மனைக்கு அருகே உள்ள ஆள் கடைசியாக பறையொலி எழுப்புவார். அதைக் கேட்டு மன்னர், முருகனுக்கு தீபாராதனை செய்வதை கற்பனை செய்து, மனதில் மணியொலியைக் கேட்டு, பரவசத்துடன் இறைவனை வணங்கி பின்தான் உணவு உண்ணுவார். அவர் அரண்மனையில் இருக்கும் நாட்களில் இந்த விதமாக அவர் மணியோசையைக் கேட்க முடிந்தது.

அரசியல் காரணங்களுக்காக மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதும், குறிப்பிட்ட நேரங்களில் முருகனின் அருளால் அந்த மணியோசையை அவர் இதயத்திலேயே உணர்வார். அந்த ஒரு நிமிடம் தரும் அளவற்ற சுகத்தில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப, கரம் கூப்பி வணங்குவார் என்று அவரருகே இருந்தவர்கள் கூறியுள்ளனர். கட்டபொம்மனின் பேருக்கும் புகழுக்கும் அவன் முருகன்மேல் கொண்டிருந்த பக்தி முக்கிய காரணம்.

முன்பெல்லாம் இறைவனுடைய பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவர். ஒவ்வொரு முறையும் அந்தப் பெயர்களைச் சொல்லும்போது அதற்குண்டான புண்ணியம் உண்டாகும். இறைவனது பெயர்களில் ஒரு அருள் அலை உண்டு. உதாரணம்: சரவணன்- சரவணப் பொய்கையில் தோன்றிய முருகன். “ச’ என்றால் மங்களம்; “ர’ என்றால் ஒளி; “வ’ என்றால் சாத்வீகம்; “ண’ என்றால் போர். சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம். பவ என்றால் உற்பத்தி ஆனவன் என்று பொருள். மங்களம், ஒளி, சாத்வீகம், தீயதை அழிக்கக்கூடிய திறன் ஆகியவற்றுடன் உற்பத்தியானவன் முருகன் என்று பொருள். இப்படி இறைப் பெயர்களை நூறுமுறை கூறி அழைக்கும்போது, பத்து முறையாவது அந்த இறைவனை நினைக்க முடியும். அதுவே பேறு. நாராயணன்- நர+ அயனம்= உயிர்களின் இருப்பிடம். செந்து+ இல்= செந்தில்- உயிர்களின் இருப்பிடம். இப்படி ஒரு மனிதனைப் பார்க்கும்போது அந்த இறைவனின் பெயரையும் அதற்குண்டான பொருளையும் சேர்த்து நினைத்துப் பழகினால், நாள் முழுவதும் இறை நினைவில் இருக்க முடியும் அல்லவா? அநிருத்- சாஸ்வதி போன்ற சமஸ்கிருதப் பெயர்களை வைத்தாலும், அந்தப் பெயருக்குள்ள பொருளுடன் நினைத்து சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கும்போது பக்தி உணர்வுகளை சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும். ஆனால் தாய்மொழியில் இறைவன் பெயர்களை வைக்கும்போதுதான் அனுபவித்துஅழைக்க முடியும். இறைவன் பெயர்களை வைப்பதில் உள்ள சிறப்பை வெளிப்படுத்துவதற்காக புராணத்தில் கூறப்பட்ட ஒரு கதை யைப் பார்க்கலாம்.

ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கு நாராயணன், ஹரி என்று பெயர் வைத்திருந்தார். இதைத் தவிர அவர் வேறு ஜெபமோ, தியானமோ, வழிபாடோ செய்ததில்லை. இறுதிக் காலத்தில் தன் உயிர் விடும் நேரத்தில் தன் இரண்டு பிள்ளைகளின் பெயர்களையும் சொல்லி அழைத்தாராம். உரிய நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. எமன், “”இந்த உயிர் சொர்க்கத்திற்குப் போகவேண்டியது” என்று கூறியபோது, எமனின் உதவியாளர், “”எப்படி ப்ரபு?

இவன் எந்த புண்ணிய காரியங்களையும் செய்யவில்லையே?” என்று கேட்டான். அதற்கு எமன், “”புண்ணிய காரியம் செய்யாவிட்டாலும் இவன் நல்லவனாகவே வாழ்ந்து இறந்திருக்கி றான். ஹரி, நாராயணா என்று பலமுறை இவன் அழைத்ததற்கே புண்ணியம் உண்டு” என்று கூறினான். பொருள் அறியாமல் பெயர் சொன்னதற்கே இவ்வளவு சிறந்த பதவி என்றால், ஆயிரம் நாமங்களையும் அல்லது 108 நாமங்களையும் பொருளறிந்து கூறினால் எவ்வளவு சிறந்த நன்மை கிடைக்கும்! இறை நாமங்கள் நம்மை சுலபமாக இறைவனிடம் அழைத்துச் செல்கின்றன.

எழுதியவர் : (9-Aug-16, 6:39 pm)
பார்வை : 334

மேலே