அலை இல்லாத கடல்
குளிர் பொழியும் நிலா
மலரின் கானம்
மௌனம் கசியும் பாறை
ஏரியின் சலனம்
உயிரின் நிழல் ..
மேலும் இங்கே சில
கதாபாத்திரங்கள்
*
இங்கு,
குருடனென்று யாருமில்லை;
விழியிலா விழியானவன்;
மழைவில் வரையும்
வானம் கொண்டவன்;
வண்ணங்களை நுகர்பவன்;
எல்லா பருவங்களிலும்
மன வசந்தம் பூத்தவன் ;
அவன்,பார்ப்பவனல்ல
தரிசிப்பவன் !
*
ஊமையென்று யாருமில்லை;
மொழியிலா மொழியானவன்;
மௌன அபிநயமவன்
விரலோவியங்களால்
பேசுபவன்
*
செவிடனென்று யாருமில்லை;
இசையிலா இசையானவன்;
அவன் ஸ்பரிசங்களின்
நாணல்களைக் குளிர்வித்து
நதியாய்ப் பாய்கிறது
இசை!
*
இங்கே இன்னுமொரு
கதா பாத்திரம்
இவன்
கதையிலா கதையானவனல்ல
கதையே இல்லாதவன்
பார்வையிருந்தும் விழியில்லை
பேச்சிருந்தும் மொழியில்லை
அவன் கடலில் அலையில்லை..
வெள்ளைக் காகிதமென
வெறிச்சோடிக் கிடக்கிறதே
மனம் பிறர்ழ்ந்த தோழனின்
மனம் !
*
கவித்தாசபாபதி
*