கைகொடுக்கும் அன்பு

நீ உன் கட்டளைத் தளபதியின்
ஆணைக்குக் கட்டுப்பட்டு அப்பாவி சனங்களை
சுட்டுத்தள்ளிய கடமைமிக்க மனசாட்சியில்லா
இராணுவ வீரனாய் இருக்கலாம்.

இரகசியமாய் வாங்குகின்ற கைக்கூலியால்
நீதிமன்றத்துக்குப் போனாலும் தீரா பிரச்சினையை
அடாவடித்தனமாய் தீர்த்துவைக்கப் பதவியை
துஸ்பிரயோகம் செய்யும் காவல் அதிகாரியாக இருக்கலாம்

வறுமைக் காரணமாய் வாய்மூடிக் கிடக்கும்
ஏழைப் பெண்ணிடம் பதவியின் பலம்காட்டி
பாலியல் இலஞ்சம் வாங்கும்
கௌரவ துச்சாதனனாய் இருக்கலாம்

வாக்குறுதிகள் வழங்கி ஆட்சிக்கு வந்து
சொன்னதை மறந்து சுருட்டுவதைச் சுருட்ட
மக்களின் கண்களில் மண்தூவும்
சனநாயக தேசத்துத் தலைமையாகவும் இருக்கலாம்
கந்துவட்டிக் கறந்து கடனாளிகளை
வாழ்நாள் கஷ்டவாளியாக்க்கிக்
கண்ணீர்க் குளிக்க வைக்கும்
பணப்பேயாய் மட்டும் இருக்கலாம்

வேலை செய்த விசுவாசிகளின் கூலியை
கொடுக்காமல் நாட்கடத்தி பணம்புரட்டும்
கொள்கையில் கைதேர்ந்த கொள்ளைக்கார
முதலாளியாகவும் இருக்கலாம்

இல்லை, அடுத்தவேளை சோற்றுக்கு வழியற்று
நடுத்தெருவில் கையேந்தும்
ஏழைத் தகப்பனாகவும் கூட இருக்கலாம்

நீ பத்திரப்படுத்தியிருக்கும் உன்
பத்திரங்களைப் பிடுங்கிக்கொண்டு
இப்ப என்ன பண்ணுவ என்று
விழிப்பிதுக்கி விளையாட்டுக் காட்டும்
ஒரு குழந்தையிடம் அதை மீட்டெடுக்க
தோற்று நிற்கும் திறமைகளுக்கு முன்
கைகொடுக்கும் அன்பு மட்டும்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Aug-16, 1:44 am)
பார்வை : 132

மேலே