சோலைவிழா -- தழைக்கட்டும் தமிழ்மொழியே

சோலைவிழா கண்டிடுவோம் சொந்தங்கள் ஒன்றுகூடி .
காலையிலே வந்திடுவர் கவிஞர்கள் எல்லோரும் .
ஓலையாக அனுப்பிடுவர் ஓங்கிநிற்கும் சோலைவிழா .
மாலைவரை தொடர்ந்திடுமே மங்காத நன்னாளில் .


வாழ்த்திடுவோம் அனைவருமே வண்ணமிகு விழாவினையும்
காழ்ப்புணர்ச்சி இதிலில்லை கண்ணியத்தின் பெருவிழாவாம்
தாழ்வின்றித் தளர்ச்சியின்றித் தரமாக நடத்துகின்றார் .
வாழ்வாங்கு நிறைந்துவிடும் வரமானப் பைந்தமிழே .


செந்தமிழைப் போற்றுகின்றச் செம்மையான கவியரங்கம் .
பைந்தமிழைப் பண்பாக்கும் பாசமிகு குடும்பத்தார் .
தீந்தமிழை அவையோர்முன் தீட்டுகின்றார் பாவலர்கள் .
எந்நாளும் வணங்கிடுவோம் எண்டிசையும் தமிழென்றே .


அற்புதமாம் சோலைவிழா அகிலமே திரண்டுவந்தே
பொற்புடைய பாக்களினால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் முன்னிலையில் கருத்தோங்க வைத்திடுவோம் .
உற்றவர்கள் சபைதனிலே உன்னதமாய் நின்றிடுவோம் .


பாமணியாய்ப் பைந்தமிழில் பட்டங்கள் வழங்கிடுவார் .
மாமணிகள் மன்றத்தில் மகத்துவமாய் வாழ்த்திடுவார் .
நாமங்கள் சிறந்தோங்க நல்வாழ்த்தும் செப்பிடுவார் .
தாமதங்கள் ஈங்கில்லை தழைக்கட்டும் தமிழ்மொழியே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Aug-16, 11:39 pm)
பார்வை : 54

மேலே