நுரைக்குமிழி

            நுரைக்குமிழி

இதழ்கள் குவிய 
இழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்றில்
குவி இதழ்கள் குவித்து உந்த
ஊதும்  என்  தேவதை

வெண்மை நிற நீர்
ஊதுகுழலின் வழி
நுரைக்குமிழிகளாக நுரைத்து
உந்தி விழ மேலெழுகையில்
வண்ண நிலவாகி பறக்கையில்
மகிழ்ச்சி பொங்கிட
துள்ளிக் குதிக்க
உலகமே வண்ணக் கோலத்தில்....

ஒவ்வொரு குமிழிகளும் வெளிவர
அவள் முகமும்  நுரைக்குமிழிகளோடு
விழாக் கோலம் வழியெல்லாம்
பல வண்ண  கோணங்களில்
நிலாவாகிறாள் அவளும்  பிரம்மிப்பில்......

ஒவ்வொன்றாய் அந்த பிஞ்சு விரல்களில் சிக்காமல் சிலவை சுழன்று 
சிலவை சிக்கிக்கொண்டு தவித்து
கண் இமைக்கும்முன்
மோதி உடைபடுவது
வியப்பு பிஞ்சுக்கும்

அவளின் மகிழ்ச்சியில் சிறிது நேரம்
உடைபடாமல் குமிழிகளும் 
அவளை ரசித்திடுகையில் 
அவள் முகம் மத்தாப்பாய்
மின்னியது விந்தை..

நுரைக்கரைசலின் வெண்மை
ஊதுகுழல் வண்ணம்
குவிந்த இதழ்களில்
வண்ணமானதில் அதிசயம்...

குழந்தைகளின் சந்தோசத்தில்
நடக்கும் விழாக் கோலம்
கனாக்காட்சியின் மாயம்

ஊதியதில் நுரைத்திடும் நீர்
குமிழ் வட்டமாக அலைந்து திரிகையில்
சிலவை சுழலும் கணத்தில்
சிலவை உடையும் வேளையில்
அவள் இதழ் பிதுக்கி
நுரைத்து வெடிக்கிறாள் அழுகையாக
ஏமாற்றத்தில்.....

ஏமாற்றத்தின் இறுதியில் அவளின்
வினாக்கள் எமக்கு வியப்பாக 
எண்ண சில வினாடிப் பொழுதில் 
எப்படி இவை சதுரமாக இல்லாமல் வட்டமாக பறக்கிறது?
எங்கே போய்  ஒளிந்து கொள்கிறது?
என்பன விழிக்க விடை புரியாமல்
விழிபிதுங்கி ஒளிகிறேன் 
நுரைக்காத குமிழியின்
நிலா போர்வைக்குள்.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Aug-16, 5:22 am)
பார்வை : 121

மேலே