அம்மான்னு சொல்லு
அம்மான்னு சொல்லு
*************************
சொகுசுக்காருல ஒரு குடும்பம்
கோவிலுக்கு போகுது...
கணவன் வண்டி ஓட்ட...
மனைவி கைக்குழந்தையுடன்
முன் இருக்கையில்
அமர்ந்திருக்க...
பின் இருக்கையில்
மாமனார் மாமியார் இருக்க...
வாகனம் சாலை நெருக்கடியில்
மெதுவாக
பாம்பு போல் நகர்ந்து செல்கிறது...
குழந்தைக்கு இன்றுடன்
ஒரு வயது பூர்த்தியாகுது...
அதாவது பிறந்த நாளாம்...
அதனால
அர்ச்சனை பண்ண
ஆனந்தமா எல்லோரும்
ஆண்டவன பாக்க கோவிலுக்கு போறாங்க...
வாகனம் செல்லும் போதே...
பின்னாடி இருந்து
மாமனார் சொல்லுறார்...
"ச்சே எவ்வளவு டிராஃபிக்...
இப்படி இருந்தா எப்படி
நேரத்துக்கு கோவிலுக்கு
போறது..."
உடனே மாமியார்
தன் மகனிடம்
"கொஞ்சம் சீக்கிரம் போடா
கோவில் நடை சாத்திட போறாங்க..."
இதற்கிடையே
குழந்தையின் அம்மாக்கு
ஒரே விளையாட்டுதான்
தன் குழந்தையிடம்...
குழந்தைய பார்த்து
அடிக்கடி ஒரு வார்த்தைய சொல்றாங்க...
அது
"அம்மான்னு சொல்லு...
அம்மான்னு சொல்லு...
அம்மா...
அம்மா...."
அந்த குழந்தையும்
தட்டு தடுமாறி
தன் பிஞ்சி வாயால்...
"ம்மா" என்ற
இரண்டு எழுத்தை மட்டும்
தன் உதடு ஒட்ட சொல்ல...
அவ்வளவு தான்...
காருக்குள்ள இருந்தாலும்
அந்த அம்மாவ கையில் பிடிக்க முடியல...
"இங்க பாருங்க நம்ம பையன்
அம்மான்னு சொல்லிட்டான்...
மாமா உங்க பேரன் பேசிட்டான்"னு....
இந்த சந்தோசத்துக்கிடையே
கார் ஒரு சிக்னலில்
நிக்குது...
கார் கதவின் கண்ணாடியை
யாரோ தட்டும் சத்தம்...
மெல்ல...
அவள் அதை திறக்க...
வெளியே இருந்து
கொஞ்சம் கெஞ்சிய குரலில்...
அதே வார்த்தை...
"அம்மா... அம்மா..."ன்னு..
அது
கொஞ்சம் வளர்ந்த குழந்தை
என்பதால்...
இவர்களுக்கு சந்தோஷம் இல்லை...
முகம் சுழிப்பு தான் ஏற்பட்டது...
எந்த பதிலும் இன்றி
கண்ணாடி மீண்டும் மூடப்பட்டது...
சில நொடியில்
எனக்கென்ன என்பதுபோல்
வாகனம் நகரத் தொடங்கியது...
எதுவும் நடக்காததுபோல்
வாகனத்துக்குள் மீண்டும்
அதே சந்தோஷம்...
இந்த ரெண்டு குழந்தைக்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு...
வாகனத்துக்குள் இருக்கும் குழந்தை
அம்மா சொன்னா
அவங்க அம்மாவ
கையிலேயே பிடிக்க முடியலை
சந்தோஷத்தில்....
பிச்சை எடுக்குற
இந்த குழந்தையும்
"அம்மா... அம்மா..."ன்னு தான்
சொல்லுது...
ஆனா இவங்க அம்மாவையும்
கையில் பிடிக்க முடியல...
எங்கே இருக்கானு தெரிஞ்சாதான
கையில் பிடிக்க...
தன் அம்மா
இருக்குற இடம்
இந்த அனாதைக் குழந்தைக்கு
தெரிஞ்சா...
இவளையும் கையில
பிடிக்க முடியாது
சந்தோஷத்தில்....
இவண்
✒க.முரளி (spark MRL K)