முகிலாக நீ முகமாக நான்

************
முகிலாக நீபொழிந்து முகமாக நான்நனைந்த
=முதல்வசந்தம் தனில்மகிழ்ந்த முத்தான நினைவுண்டு
முகில்போல நீமறைந்து முகம்நனைக்கும் கண்ணீரால்
=முழுநாளும் நனைந்திருக்க மும்மாரி ஆனதென்று,
மகிழ்வான இல்வாழ்வை மரணத்தால் கொன்றழித்த
=மணவாளன் பிரிந்தஇளம் விதவைப்பெண் உள்ளத்தே
முகிலாக அலைமோதும் மோகத்தை தணிப்பதற்கு
=மறுதார மாக்கவரும் மனம்படைத்தோ ரெவருண்டு?
மட்டில்லா மகிழ்ச்சியுடன் மொட்டவிழும் மலர்களிலே
=மனமுவந்து முத்தமிட்டு மதுவுண்ணும் தேனியுண்டு
முட்டையிடும் பெட்டைக்கோழி முறையாக இணைசேர
=முற்றத்தில் மேய்கின்ற முத்தானச் சேவலுண்டு
முட்டுகின்ற வார்த்தைகளை மெட்டெடுத்துப் பாடுகையில்
=முத்தமிட்டு சேர்ந்திணைய மெல்லிசையால் வழியுமுண்டு
மட்டற்ற மகிழ்ச்சிபெற மணமுடிக்கத் தவித்திருக்கும்
முதிர்கன்னி வாழபொருள் மறுத்துவந்தார் எவருண்டு?
முடிச்சொன்றுக் கழுத்தினிலே முடிகின்றக் கணவன்தனை
=முந்தானை முடிச்சிலவள் முடிந்துவிடும் முன்னாலே
முடிவாகக் கடல்தாண்ட முடிவெடுத்துக் கொண்டவனும்
=முதலிரவை அவசரமாய் முடித்துவிட்டு பத்தினியாள்
மடிசுமக்க விதைவிதைத்து மறுகணமே சிறகடித்து
=மனம்பதைக்க விட்டுவிடும் மணவாழ்க்கைச் சிறையினிலே
முடிவின்றி வாடுகின்ற மொட்டுவிட்ட மலரிதலில்
=முள்குத்தும் வேதனையின் முகவரியை கண்டதுயார்?
முத்துதிர்க்கா சிப்பியினை முகம்மலரப் பார்த்தவர்கள்
=முதல்தேவை யாயவற்றை முழுதுமள்ளி வைப்பதுண்டு
முத்தமிட்டு நாய்வளர்க்கும் மோகமுற்றோர் பெட்டைஎனில்
=முழுகாமல் இருப்பதற்கு மருந்தூசி போடலுண்டு
மத்தளமாய் அடிவாங்கும் மழலையிலாப் பெண்மனதை
=மட்டுமிங்கு புண்ணாக்கி மகிழ்வதற்கோ மனிதமிங்கு?
முத்திரைபோல் மாதர்களின் முகம்குத்தும் சமூகத்தில்
=முகிலாய்நீ. நிற்கும்நிலை மாற்றும்முகம் நானென்பதார்?
*மெய்யன் நடராஜ்