ஆசைகளின் படியில்

ஆசைகள் இருக்குது ஆயிரமாயிரம் உள்ளத்தில்
அனைத்தும் நடந்தால் மகிழ்வேன் அகிலத்தில்
எண்ணியே கழிக்கிறேன் ஏக்கமுடன் நாட்களை
நடக்குமா நிச்சயம் என்னுயிர் பிரியுமுன்னே !
எல்லையில்லா நாடுகள் ஏற்படுமா வரைபடமும்
வளைதளம் வழியே நம்தலைமுறை காணலாமா !
மறைந்திட்ட மாபெரும் தலைவர்கள் திரும்பிவந்து
மாநாடும் நடத்திட்டால் காணொளியில் காணலாமா !
சாராயக் கடைகளெல்லாம் நூலகங்களாக மாறி
சமுதாயக் கூடமெல்லாம் பள்ளிக் கூடங்களாகி
படித்தவரே உண்டென்று அடித்தட்டு மக்களுக்கும்
கல்விதனை அளித்திட்டு கல்லாமை அழியட்டும் !
நதிகள் அனைத்தையும் நாட்டிலே இணைத்திட்டு
வறட்சியை காணாத புரட்சியை கொணர்வோம் !
அடுக்குமாடி கட்டிடங்கள் இனிவராது என்றாகி
விவசாய நிலங்கள் மறையாத நிலைசெய்வோம் !
சாதிமதங்கள் இல்லாத சமத்துவ சமுதாயமும்
அல்லலுறும் எளியோர் அவதியுறும் முதியோர்
என்றென்றும் மகிழ்வாக மண்ணில் வாழ்ந்திடவும்
வழிவகைகள் செய்வோம் அனைவரும் இணைந்து !
அந்நியர் வந்திடாமல் நம்மவர் தொழில்துவங்க
அரசாங்க விதிமுறை செயல்படுத்த வழிமுறை
கையூட்டு இல்லாமல் காலூன்ற முனைவோரை
நாட்டின்நிலை உயர நாமும் முயன்றிடுவோம் !
வேலையிலா நிலைநீங்கி வேண்டிய நிதியுடன்
இல்லங்கள் சோலையாகி இதயங்கள் குளிர்ந்து
கவலையின் அடிச்சுவடே காலமும் தெரியாது
களிப்புடன் கழியட்டும் வாழும்வரை நெஞ்சங்கள் !
ஆசைகளின் படிகள் அதிகம்தான் அறிந்திடுவேன்
படிப்படியாய் நடந்தால் மகிழ்ச்சிதான் மக்களுக்கு
உள்ளங்கள் நிறைந்திடும் இல்லங்கள் மகிழ்ந்திடும்
உலகமே கொண்டாடும் நாளுமொரு திருநாளை !
( கவியுலக பூஞ்சோலையில் இன்று பதிவு செய்தது )
பழனி குமார்