இணையதள போட்டிக் கவிதை

சிற்றோடையில் கப்பல் விடும்
சிரித்த முக இளமலர்களே..!
ஆசைகளின் படியில்,
அன்னையின் மடியில்,
சிற்றலைகளின் தாலாட்டில்
வேண்டும்வரை கப்பல் விட்டு
விளையாடிக் கொள்ளுங்கள்...
காமுகக் கழுகுகளின்
பார்வையில் படாமல்...!

பாரதத்தின் பண்பாட்டுப் பதாகைகளே..!
பெண் குழந்தைகள்
உங்களின்
எதிர்காலப் பயணத்தில் மட்டும்
எத்தனை எத்தனை
இறுக்கும் சுருக்குக் கயிறுகள்..!

ஓய்வெடுக்க முடியாத
திருமண வருங்காலத்தில்
சமூகமெனும் ஓடையில்
பலமான எதிர்ப்புக் காற்றுகளை
சமாளித்தாக வேண்டும்.

விரக்தியாக வேண்டாம்..
வீறு கொண்டெழுங்கள்....!

சாதனைக் கப்பல்களை
தன்னம்பிக்கை பாய்மரம் கொண்டு
வெள்ளோட்டமாய் துவக்குங்கள்.

சோதனைகளும் சாதனையாகும்.
தொலைவானம் இறங்கி வந்து
ஆரத்தழுவி ஆரத்தியெடுக்கும்..!

நிச்சயம் இந்த கப்பல் பயணம்
எதிர்ப்புக் காற்றலைகளை
எதிர்த்துப் பயணமிட்டு
வெற்றியின் விலாசங்களை
வாழ்க்கையின் வேதமாய்
சொல்லித் தரும்.

உன் எதிர்கால வாழ்வின்
பிரச்சனைத் தடைகளைத் தாண்டி
சமாளித்து இலக்கை அடையும்
சூட்சுமத்தை இவை சொல்லித்தரும்.!

இருந்தும்
ஆசைகளின் படிகளில்
கவனம் தேவை..
வழுக்கி விழுவது
ஆசைகள் என்றால்
கவலையில்லை...
வழுக்கி விழுவது
நீயாக இருந்துவிடக் கூடாதென்பதில்
உன் கவனம் இருக்கட்டும்...!

- க.அர.இராசேந்திரன் -

என் அன்னைத் தமிழுக்கும், எழுத்தின் அறிஞர் பெருமக்களுக்கும், எழுத்தின் ஒவ்வொரு தோழமைகளுக்கும் இந்த பரிசை சமர்ப்பிக்கிறேன். நீங்களின்றி நானில்லை.

எழுதியவர் : க.அர..இராசேந்திரன் (17-Aug-16, 4:19 pm)
பார்வை : 244

மேலே