சிந்துகின்றோம் ஆனந்தக்கண்ணீர்

"சிந்து"கின்றோம் ஆனந்தக்கண்ணீர்

===========================================ருத்ரா இ பரமசிவன்





தங்கம் தங்கம் என்று

கனவுகள் நமக்கு ஆயிரம் ஆயிரம்.

கலங்கிட வேண்டாம்

தவிடு பொடியாக வில்லை.

சாதிப்பாள் சிந்து

கவலைகள் தேவையில்லை.

சிந்துவுக்குள் ஒரு தமிழச்சி உண்டு.

சிந்துவெளியும் மொகஞ்சதரோ ஹரப்பாவும்

நம் இந்திய வரலாற்றின் மூல ஊற்று.

அதன் வேரும் அதன் வேர்த்தூவியும்

தமிழ் தமிழ் தமிழன்றி வேறில்லை.

நகைக்க நான் கூறவில்லை.

ஆராய்ச்சியில்

"காய்தல்" இன்றி "காழ்ப்பு" இன்றி

உற்று நோக்கினால்

உண்மை தெரியும்.



வெள்ளி பெற்றாலும் சிந்துவின் நம்பிக்கை

ஒரு கிம்பர்லி.

அதன் வயிற்றுள்ளே

தங்க லாவா

பீறிடும் நாள் வரும்

இன்னும் ஒரு நாலாண்டு பொறுத்தால் போதும்.

இன்னும் வெற்றிமேடை

அவள் மூச்சுவிடும் தூரமே.

அந்த வெப்பத்தில்

பொன்னின் உதயம் புது

பொழுதென புலரும்.

அந்த "வெள்ளித்திருமகள்" என்றும்

நம் வெற்றித்திருமகளென

கொண்டாடுவோம்.

வீர வெற்றிப்பறை முழக்குவோம்!



ஆடித்தள்ளுபடிக்கு

ஆய்ந்து மொய்க்கும் ஈக்களாய்

சோதிடப்பல்லாங்குழியில்

போய் வீழும் பதர்களாய்

விளம்பரச் சுரண்டல் நகம் கீற‌

புண்பட்ட புழுக்களாய் உள்ள நிலை மாறி

பண்பட்ட மண்பட்ட நம்

பழம் நாகரிக ஒளி பூத்து

சிந்து வெளி விடி வானம்

காண்கின்ற ஒரு நாளே

தங்கப்பதக்க மரக்காடு

தமிழனின் கைப்படுமே!



ஒலிம்பிக் எனும்

ஆலிவ் இலை கிரேக்கத்து

அந்நாளின் விளையாட்டுத்திடல் கூட‌

அடி பதித்த தமிழன் சுவடுகளில்

பதிந்திருக்கும் புதைந்திருக்கும்.

யவனர்கள் என்று நம்

சங்கதமிழ்ச்சோலைகளில்

கைகோத்த பண்டை மணம்

கமழ்ந்திருக்கும் காட்சிகள் மறவாதீர்.



அவள் சாதி தேவையில்லை நமக்கு.

அவள் கும்பிடும் கடவுள்கள் பற்றியும்

கவலையில்லை.

"சிந்து" என்கிற பெயரே போதும்

தோல் தமிழின் உயிரொலி அது!

ஒவ்வொரு ஆணிலும் பெண்ணிலும்

விளையாட்டுத்திறனின் தங்கத்தை

உருக்கி எடுக்கும் உரம் உண்டு.

ஒலிம்பிக்கில் வீழ்ந்தோம் என்ற

ஓலங்கள் தேவையில்லை ..அதனால்

"சிந்து" கி ன்றோம் ஆனந்தக்கண்ணீர்.



====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (22-Aug-16, 1:17 am)
பார்வை : 56

மேலே