பெண் அகராதியில் ஆண்

கஞ்சிக்கலயம் வெச்சு,மனசிலென்ன குறுஞ்சிரிப்பு..?
கொஞ்சுது எம்மனசு, நெஞ்சாங்குழியில் தேனூறுது
சேத்துவயலக் கலக்கும்போது, அலைபோல ஓஞ்சிரிப்பு.
நாத்துவயலப் பாக்கும்போது, அத்தனையும் ஒ நெனப்பு...!.

பாட்டுக்கொரு பஞ்சமில்ல, நேசத்துலயும் வேசமில்ல
ஏட்டையும் நா புடுச்சதில்ல, எழுத்தறிவும் எனக்குமில்ல
அகராதி யின்னு சொன்னா, ஆருகிட்ட நாங்கேக்க
தகராறே வேண்டாம்னு மாமன் மகளத் தேடிவந்தே...!

அலையடிக்குது விசிலடிக்குது, ஆசவெச்ச எம்மனசு.
செலையழகியப் பாக்கும்போது, சூடாகுது என்னொடம்பு.
கறுக்கருவா கண்ணுக்குள்ள, என்னத்த நீ வெச்சிருக்க..?
கறுத்த மச்சா எம் மனச, கரும்புச்சாறா ஆக்கிடற...!

எளநீர் மனசுக்குள்ள, வழிஞ்சோடுது எளஞ்சிரிப்பு.
பதநீர் குடிச்சாலும், இதுல பாதிகூட தேறலியே.
உசுருக் கொளத்தில் தாமரையா, பூத்து சிரிக்கறயே
உசுருக்குள்ள உசுராக, நரம்பாட்டம் மாறிட்டயே…!

பொண்ணு நீதா அகராதி, அதுல ஆம்பள நா யாரு...?
மண்ணு போல நிக்காம, ஒம் மனச சொல்லிப்புடு.
என்னத்த நீ யோசிக்கற, அத்த பெத்த செவப்பழகே...?
உன்னத்தாங் கேட்கறனே, வாய்தொறந்து சொல்லிப்புடு.

நேத்து நட்ட நாத்தெல்லாம், காஞ்சே போயிருக்கும்.
சேத்து வயலும் நெறஞ்சிருக்கும், இப்ப நா போகட்டுமா..?
அந்தி சாஞ்ச பொறவால, ஆத்துப் பக்கம் நா வாரேன்
தந்தி அடிக்குங் குளிரிலயும், காத்திருக்கேன் நீ வரியா..?

பாசம்வெச்ச எம்மனச அகராதியா மாத்திபுட்டே
ஆசமச்சாம் பாசத்துல, அந்தியில் பேசவந்தேன்
என்னோட மனசுக்குள்ள, உசுராக நீதானே …
உன்னோட உசுராக, எப்போதும் நாந்தானே ..!

- க.அர.இராசேந்திரன்-

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (23-Aug-16, 9:18 am)
பார்வை : 829

மேலே