முனிமணியம்மா

கருப்பு நிறம்,
கறைப்பட்ட காட்டன் புடவை,
கன்னத்தில் மச்சம்,
கலங்கிய கண்கள்.... - இவளே
என் அம்மா....

பிஞ்சி வயசுல பிரிஞ்சி வந்தவன,
நெஞ்சில போட்டு வளத்த உன்ன
அம்மானு கூப்புட வாய்வரல,
ஐரண்டு வருஷமா...

பாடம் படிக்க பள்ளிக்கு அனுப்பி,
பாதுகாப்பா படியில இருந்த....- என்ன
பத்துமாசம் சுமந்தவளுக்கு,
பளு குறைக்க நீ வந்த...

தென்னங்கீத்து வித்து
தேன் முட்டாயும் ......
ரேஷன் அரிசி வித்து
ஜாமென்ட்ரி பாக்ஸ்சும்...
கோதுமை காசுல
கோனார் நோட்ஸும்...
மண்ணெண்ணெய் காசுல
மாங்கனி பொம்மையும்
எனக்கே கெடச்சுது - உன்
ஆறாவது புள்ளையா....

காய்ச்சல் அடிச்சா கலங்கி போவ,
காயப்பட்டா கனலா எரிவ....
அதட்டி மெரட்டி சோறு ஊட்டுவ....
அடி தப்பி பட்டா எனக்கு முன்ன அழுவ....

கெஞ்சி கொஞ்சி மருந்துபோட்டு,
தூங்கவச்ச மார்போடு அணைச்சு!!!
நெஞ்சி அனலும், மேல் வீசும்
மண்ணெண்ணெய் வாசமும்
என் காய்ச்சலுக்கு மருந்தாச்சு!!!

பெத்ததஞ்சி, வளத்ததாறுன்னு
வாயாற சொல்ல கேட்டிருக்கேன்....
வளத்த கடன் தீர்க்கத்தான்
வாய்ப்புக்காக காத்திருக்கேன்....!

ம்ம்... முனியம்மா தான் மணியம்மா....

எழுதியவர் : மணிகண்டன் (23-Aug-16, 12:41 pm)
பார்வை : 135

மேலே