தூரம் அதிகமில்லை

தூரம் அதிகமில்லை தொட்டுவிடும் தொலைவுதான்
நிலவும் தூரமில்லை நீந்திவிடும் தூரம்தான்
சூரியனும் கைகொடுப்பான் லட்சியத்தை அடைந்திடுவாய்
சாரல்மழை வழிநெடுக ஆசிர்வாதம் தந்துவிடும்

நேர்வழியில் சென்றுவிடு சோர்வதையே கொன்றுவிடு
மயக்குகின்ற காரணிகள் ஆயிரம்தான் வழியில்வரும்
இயங்குகின்ற இதயம்நோக்கி அம்புநூறு எய்துவிடும்
உறுதியுடன் நீயிருந்தால் தலைவணங்கி சென்றுவிடும்

எடுக்கின்ற முயற்சிகளில் பின்வாங்கி போகாதே
தடுக்கின்ற எவரும்வந்தால் தயங்காமல் மிதித்துவிடு
லட்சியத்தின் வழியெங்கும் பூக்களாக இருக்காது
கற்களையும் முட்களையும் கடந்துவிட்டால் நிம்மதியே

விரைந்து கிடைத்திடாது எந்தவொரு வெற்றியும்
போராட்டம் இன்றியது உன்தோளை அடைந்திடாது
அடுத்த நொடியில்கூட அவ்வெற்றி கிடைத்திடலாம்
இதுவரைக்கும் வந்துவிட்டாய் திரும்பிமட்டும் போகாதே

சாதனை மனிதர்களின் வாழ்வினைப் படித்திடுவாய்
எவர்க்கும் இலகுவாக எவரெஸ்ட் எட்டிடாது
எத்தனை தடைவந்தாலும் எதிர்நீச்சல் போட்டுவிட்டால்
தூரம் அதிகமில்லை உன்பக்கமே வெற்றிசேரும்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Aug-16, 8:59 pm)
பார்வை : 283

மேலே