முத்துச் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பு கண்ணுக்கு குளிர்ச்சி
மழலையின் சிரிப்பு போக்கிடும் தளர்ச்சி
மனம்விட்டு சிரிக்க நமக்கில்லை அயர்ச்சி
சிரித்திட தினமும் எடுப்போமே முயற்சி
விலங்குகள் சிரிக்க முடிவது இல்லை
பறவையின் சிரிப்போ கண்டது இல்லை
நமக்கென அளித்த கொடையிந்த சிரிப்பே
இழப்பேதும் இல்லை புரிந்துகொள் நட்பே
சிடுசிடு முகங்கள் பிடிப்பதே இல்லை
கோபத்தில் இதயம் பெற்றிடும் தொல்லை
சிரிப்பதை பகிர உடல்நலம் கூடும்
சிந்தனை மிளிரும் முகம்மிக ஒளிரும்
புன்னகை முகங்கள் காந்தமாய் மாறும்
பார்ப்போரை எல்லாம் தன்பக்கம் கவரும்
இன்பத்தை ஊட்டும் சோர்வையோ ஓட்டும்
துன்பத்தை விரட்டி நல்லிசை மீட்டும்
பூக்களின் சிரிப்பு பூமிக்கு அழகு
மக்களின் சிரிப்பு நாட்டுக்கு அழகு
இதழ்களில் சிரிப்பை எப்போதும் கொள்வோம்
இனிய புன்னகையால் ஜகத்தினை வெல்வோம்