பார்வை
நெருப்பென எரிக்கும்
புரட்சியின் பார்வை
மழையெனப் பொழியும்
கவிஞனின் பார்வை
உலகை வழிநடத்தும்
ஞானியின் பார்வை
ஞாலத்தை ஆசிர்வதிக்கும்
கடவுளின் பார்வை
நேர்மையாக இருந்தால்
மதிக்கப்படும் பார்வை
தீமையை ஆதரித்தால்
மிதிக்கப்படும் பார்வை
இனிமையைக் கூட்டும்
மழலையின் பார்வை
இன்பத்தை ஊட்டும்
இயற்கையின் பார்வை
இரைதேடி அலையும்
பறவையின் பார்வை
விதைதேடிப் பிடிக்கும்
உழவனின் பார்வை
போதைகூட ஏற்றும்
சிலவஞ்சகர் பார்வை
நடுத்தெருவில் தள்ளும்
சிலநஞ்சுக்கள் பார்வை
பார்வையின் ஜன்னல்
அழகிய கண்கள்
காட்சியைக் காட்டி
குதூகலம் அளிக்கும்
மனப்பார்வை கொண்டு
உலகினை நோக்க
அமைதியும் சாந்தமும்
நமைவந்து சேரும்....