கற்றது கைமண் அளவு
நன்றியெனும் பாடத்தை நாயிடத்தில் கற்று
=நல்லன்புப் பாடத்தை தாயிடத்தில் கற்று
குன்றிவரும் ஒற்றுமையின் பாடத்தை காக்கை
=கூப்பிட்டே பகிர்ந்துண்ணும் காட்சிகளில் கற்று
சென்றிருந்த வனத்தினிலே சிறகடித்த பறவை
=சேமித்த சுதந்திரத்தின் பாடத்த்தைக் கற்றும்
நின்றிருந்தேன் வாழ்க்கையிலே நிதந்தோரும் கற்க
=நிறையவே உண்டென்னும் நினைப்பையுமே கற்று.
கொள்கைஎனும் பாடத்தைக் குரங்கிடத்தில் கற்று
=கூர்மைஎனும் பாடத்தை கொக்கலகில் கற்று
வெள்ளியது முளைக்கின்ற விஷயத்தை என்றும்
=விடிகாலை கூவுகின்ற சேவலிடம் கற்று
அள்ளியள்ளித் தருகின்ற ஆனந்தம் தன்னை
=அமுதமெனப் பொழிகின்ற குழந்தையிடம் கற்று
முள்ளிருக்கும் செடியினிலே முகையவிழ்க்கும் பூவில்
=முறுவலதுப் பூக்கின்ற பாடமுமே கற்றேன்
கொல்லவரும் பாம்பிடத்தில் கொடும்விஷத்தைக் கற்று
=கூடுகட்டத் தெரியாத குயில்தானும் வாழ்வில்
கள்ளத்தன மாகவேதான் காக்கையதன் கூட்டில்
=கச்சிதமாய் போட்டுவிடும் தந்திரத்தைக் கற்று
எள்ளளவும் குறையாதமல் ஈர்த்தெடுக்க வைக்கும்
=இயற்கையிடம் பேரழகின் பாடத்தைக் கற்று
உள்ளமதில் போட்டுவைத்தப் பின்னாலும் பார்த்து
=உணர்கின்றேன் கற்றதின்னும் கைமண் அளவே!
*மெய்யன் நடராஜ்