சிரிக்காதே ப்ளீஸ் ப்ளீஸ்

உலகத்தின் அழகானவை அனைத்தும்
உன் அருகே இருந்த போதிலும்
அதெப்படி அனைத்தையும் சிரித்தே தோற்கடிக்கிறாய்....


இந்த விஷயம் தெரியாமல் வாசலில் காத்திருக்கும் நிலவுக்கும்,
சோபாவில் அமர்ந்திருக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன பதில் சொல்லட்டும் ?

இல்லை இல்லை நாங்கதான் அழகு
மறுபடியும் போட்டி வையுங்கள் என்று கூறிக் கெஞ்சும்
மயில்களையும் வெண்புறாக்களையும் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது!


வீடு வரை வந்துவிட்டார்களே
என்ன செய்வது
வெறும் கையுடன் அனுப்பாமல்
உன் புகைப்படங்களை கொடுத்தனுப்பினேன்..
வயிறெரிந்து சாகட்டும்..ஹா ஹா ஹா..


உண்மையை சொல்
நீ எப்பொழுதாவது அழகாய் இல்லாமல் இருந்ததுண்டா...?
ஏன் கேட்கிறேன் என்றால்
முகம் தொங்க திரும்பி போகும் அவர்களைப் பார்த்தால்
எனக்கே பாவமாய் இருக்கிறது..

இதில் வேடிக்கை என்னவென்றால்
நீ காலையிலிருந்து குளிக்கவேயில்லை என்று சொன்னால்
எல்லாரும் என்னை பார்த்தது முறைக்கிறார்கள்...!


இதெல்லாம் பத்தாதென்று
பிளானெட் 7 ,பிளானெட் 34,பிளானெட் 876 என
ஏதோதோ வேற்றுக்கிரக அழகிகள் வேறு !!


உன்னோடு கூட ஒரு செல்ஃபிக்கு இத்தனை போரா
பெரும் அக்கபோரல்லவா இருக்கிறது!
புலிகேசி மாதிரி
புலம்பித்தீர்க்கிறேன்...


கண் திருஷ்டி பொம்மையை விற்க இந்த தெருவையே திரும்ப திரும்ப
சுற்றி வருகிறான் ஒருவன்...

உன்னை பாக்கும் சாக்கில் ஐஸ் கட்டி கடன் கேட்டு வருகிறான்
இந்த மானங்கெட்ட சூரியன்!

அப்பாடா! எல்லாத்தையும்
ஒருவழியா சமாளிச்சு அனுப்பிச்சாச்சு..

ஹே! ஹே! நில்லு நீ எதுக்கு மறுபடியும் சிரிக்கிற...
அச்சச்சோ!

டிங் டிங் ! டிங் டிங்!

அடபோங்கப்பா! மறுபடியும்
காலிங் பெல்லா ...
இருங்கடா வரேன்.. உங்களை...

எழுதியவர் : இமான் (27-Aug-16, 9:26 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 96

மேலே